இந்தியாவில் ஏராளமான இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி கொண்டு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படிப்பை முடித்து ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு சந்தையில் நுழைகிறார்கள்.
ஏஐ வருகையால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் படிபடியாக குறைந்துவருவதை காண முடிகிறது. இந்த சூழலில் ஐடி வேலை தான் வேண்டும் என காத்திருக்காமல் வேறு துறைகளுக்கும் இளைஞர்கள் செல்வதை காண முடிகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஐடி அல்லாமல் தற்போது ஒரு துறைக்கு அதிக டிமாண்ட் எழுந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு சம்பளத்தை வாரி வழங்கி ஆட்களை வலைவீசி தேடி வருகின்றன. அது என்ன துறை என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை தற்போது உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியர்கள் மத்தியில் விமான பயண ஆர்வம் அதிகரித்துள்ளதால் முன்னணி விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகின்றன. இதனால் நாட்டில் விமானிகளுக்கான தேவை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இளம் தலைமுறையினருக்கு மிக சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இந்தியாவில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் இண்டிகோ , ஏர் இந்தியா போன்ற முன்னணி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான புதிய விமானங்களை வாங்குவதற்காக உலகளாவிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இவை பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

அடுத்தடுத்து வரவுள்ள இந்த புதிய விமானங்களை இயக்க ஏராளமான விமானிகள் தேவை.இது தவிர மத்திய அரசு நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை வான்வழி பாதை மூலம் இணைக்கும் UDAN திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே தகுதியான வணிக விமானிகளின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு விமானிகளை வேலைக்கு எடுக்கின்றன. சம்பளத்தை வாரி வழங்கவும் தயாராக உள்ளன.
இந்தியா மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து விமானிகளை பணிக்கு அமர்த்த ஆர்வமாக உள்ளன. இந்த டிமாண்ட் இனி வ்ரும் ஆண்டுகளில் இன்னமும் அதிகரிக்க தான் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவின் விமானியின் அனுபவம், தகுதி மற்றும் அவர்கள் இயக்கும் விமானத்தின் வகையை பொறுத்து ஊதியம் மாறுபடுகிறது. ஜூனியர் ஃபர்ஸ்ட் ஆபீசர் (Co-Pilot ) நிலையில் இருக்கும் நபர்கள் அதாவது ஃபிரஸ்ஸராக பைலட் வேலைக்கு வருவோருக்கு மாதந்தோறும் 1,00,000 ரூபாய் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது.
அதுவே 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஃபர்ஸ்ட் ஆபீசருக்கு மாதந்தோறும் 2,50,000 முதல் 4,00,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் இருந்தால் 5 லட்சம் ரூபாய் முதலும் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருந்தால் மாத சம்பளமே 12 லட்சம் ரூபாய் முதல் கிடைக்கிறது. விமானத்தை இயக்கிய நேரம் அதிகரிக்க அதிகரிக்க சம்பளமும் அதிகரிக்கும். இது தவிர, தங்குமிடம், குடும்பத்தினருக்கான இலவச விமான பயண சலுகைகளும் கிடைக்கும்.
இந்தியாவில் ஒரு வணிக விமானியாக (Commercial Pilot Licence - CPL) மாறுவதற்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முக்கிய பாடங்களாக படித்திருக்க வேண்டும். அவ்வாறு இயற்பியல், கணிதம் பயிலாத அறிவியல் அல்லாத பிற பிரிவு மாணவர்கள் NIOS மூலம் பிரிட்ஜ் கோர்ஸ் படித்து தகுதி பெறலாம்.
இதனை அடுத்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிப்படி, உடல் தகுதி சான்றிதழ்களை பெற வேண்டும். இதனை அடுத்து அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்து தேர்வு எழுதி முறையாக பயிற்சியை முடிக்க வேண்டும். இதன் பின் DGCA உங்களுக்கு உரிமம் வழங்கும். இதன் பின்னர் Type Rating அதாவது Airbus A320 அல்லது போயிங் Boeing 737 போன்ற குறிப்பிட்ட வணிக விமானங்களை இயக்குவதற்கான சிறப்பு பயிற்சியை முடிக்க வேண்டும்.தற்போது பல முன்னணி விமான நிறுவனங்கள் தங்களின் சொந்த 'Cadet Programmes' மூலம் மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து, நேரடியாக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications

