டெல்லி: இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. தொலைத்தொடர்பு சேவையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது அடுத்ததாக ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வோடபோன் ஐடியா இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை வழங்கக்கூடிய மூன்றாவது பெரிய தனியார் நிறுவனமாக திகழ்கிறது.
இந்த சூழலில் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் அரசுக்கு சொந்தமாக 48.99 சதவீத பங்குகள் இருக்கின்றன. மேற்கொண்டு இந்த பங்குகளை கைப்பற்றி வோடபோனை அரசு நிறுவனமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சிஎன்பிசிக்கு பேட்டி அளித்துள்ள மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா , வோடபோன் ஐடியா நிறுவனத்தை அரசு நிறுவனமாக மாற்றும் எந்த ஒரு திட்டமும் தற்போதைக்கு பரிசீலனையும் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

ஒரு தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தில் 48.99 சதவீத பங்குகளுக்கு மேல் அரசால் வாங்க முடியாது என குறிப்பிட்டு இருக்கிறார். வோடபோன் ஒரு காலத்தில் இந்தியாவின் தொலைதொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக இருந்தது. பின்னர் சரிவை சந்தித்தது. இதனை அடுத்து வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைக்கப்பட்டு வோடபோன் ஐடியா என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் அலைக்கற்றை ஏலம் எடுத்ததற்காக பல ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டி இருந்தது. இதற்கு பதிலாக வோடபோன் ஐடியா நிறுவனம் தங்களின் ஈக்விட்டி பங்குகளை வழங்குவதற்கு முன் வந்தது. இவ்வாறு படிப்படியாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 48.99 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் சென்றுள்ளது.
தற்போதைக்கு இந்நிறுவனத்தின் அதிக பங்கு வைத்திருக்கும் பங்குதாரராக அரசு இருக்கிறது. இந்நிலையில் மேலும் உள்ள நிலுவை தொகைக்கும் பங்குகளை வழங்க தயார் என வோடபோன் ஐடியா கூறுகிறது. ஆனால் அவ்வாறு கோர வோடபோனுக்கு உரிமை இருக்கிறது ஆனால் அரசால் 48.99 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை கையகப்படுத்த முடியாது என அரசு கூறி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து தொலை தொடர்பு துறையும் நிதி அமைச்சகமும் இணைந்து விசாரணை நடத்தி முடிவெடுக்கும் என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் தொலைதொடர்பு துறைக்காக செய்யப்படும் மூலதன செலவினம் என்பது சர்வதேச தரத்திற்கு நிகராக நிகராக இருக்கிறது என அவர் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications