யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அரசு கட்டணம் விதிப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய நிதியமைச்சகம் முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் UPI மூலம் ஜிபே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளை கொண்டு கியூ ஆர் கோடு அல்லது மொபைல் நம்பர் மூலமாகவே நாம் எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது. அனைத்து தரப்பு மக்களும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் இருப்பதே யுபிஐ-இன் வெற்றிக்கு காரணம். இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட போவதாக எழுந்த வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.

சாதாரண மக்கள் மற்றும் நுகர்வோருக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என நிதியமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் அல்லது தனிநபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் (Person-to-Person - P2P) அனைத்து UPI பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமில்லாமல் இலவசமாகவே இருக்கும். வாடிக்கையாளர்கள் தாங்கள் செய்யும் பண பரிவர்த்தனைக்கு எந்தவொரு கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.
அதே வேளையில் மெர்ச்சென்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) என்பது வணிகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்பதற்காக வங்கிகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு செலுத்தும் ஒரு கட்டணம். ஒருவேளை வருங்காலத்தில் MDR அறிமுகப்படுத்தப்பட்டால் கூட, அது அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொதுவானதாக இருக்காது என தெரிவித்துள்ளது.
இந்த MDR கட்டணம், ஒரு குறிப்பிட்ட தொகையை தாண்டிய வணிக பரிவர்த்தனைகளுக்கு (Merchant Transactions) மட்டுமே பொருந்தும். மிக சிறிய கடைகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், இந்த கட்டணம் மிக குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் யுபிஐ பயன்படுத்தினால் இனி கட்டணம் என பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து இலவசமாகவே யுபிஐ பயன்படுத்தலாம் என விளக்கம் தந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 'வரி மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026' -இல் எம்டிஆர் கட்டணங்களை அறிமுகம் செய்யும் அம்சம் இடம்பெற்றிருந்தது.
ஏற்கனவே UPI சேவையின் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்யவும், சைபர் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தவும் நிதி தேவைப்படுகிறது என வங்கிகள் மற்றும் பிற பேமெண்ட் கேட்வே அமைப்புகள் தெரிவித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் யுபிஐ பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை அவை தொடர்ந்து இலவசமாகவே நீடிக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. எம்டிஆர் கட்டணம் பெரு வணிகர்களுக்கு தான் அதுவும் தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications

