தற்போது யுபிஐ சேவைகள் இல்லாத இடமே இல்லை என கூறலாம். அந்த அளவிற்கு எங்கு சென்றாலும் நாம் யுபிஐ செயலிகள் வாயிலாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது. ஒரு நண்பருக்கு பணம் அனுப்ப வேண்டும், ஒரு காப்பீடு நிறுவனத்திற்கான ப்ரீமியம் செலுத்த வேண்டும், ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கியதற்கு பணம் செலுத்த வேண்டும் என அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளையும் எளிமையாக யுபிஐ செயலிகள் வாயிலாக நம்மால் மேற்கொள்ள முடிகிறது.
கியூஆர் கோடு அல்லது மொபைல் நம்பர் இருந்தால் போதும் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு நம்முடைய கணக்கிலிருந்து பணத்தை அனுப்பிவிட முடிகிறது. எங்கு சென்றாலும் கையில் பணத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று அவசியமில்லை மொபைல் போனும் அதில் யுபிஐ செயலிகளும் இருந்தாலே போதும். அந்த வகையில் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் யுபிஐ செயலிகளின் பயன்பாடு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் மதிப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

யுபிஐ செயலிகள் நம் அன்றாட பயன்பாடுகளுள் ஒன்றாக மாறிவிட்டன. ஆனால் எத்தனை காலத்திற்கு இது இலவசமாகவே நமக்கு கிடைக்கும் என்பதுதான் கேள்வி. தற்போது இந்த சேவைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசுதான் ஏற்றுக் கொண்டு வருகிறது. விரைவில் இந்த நிதி சுமை மக்களின் மீது விழுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் மத்திய அரசு இதற்கு தெளிவான பதிலை அளித்திருக்கிறது. யுபிஐ தொடர்ந்து இலவசமான சேவையாக தான் இருக்கும் மக்கள் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என தெரிவித்திருக்கிறது.
கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2026- 2027 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான மானியமாக 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. மெர்ச்ண்ட் டிஸ்கவுண்ட் ரேட் மாடல் அடிப்படையில் தொடர்ந்து சாமானிய மக்கள் இலவசமாக யுபிஐ சேவைகளை பெறுவதை இந்த நிதி ஒதுக்கீடு உறுதி செய்கிறது.
அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய செலவுகளை அரசு வழங்கி விடுகிறது. எனவே வங்கிகளும் நிறுவனங்களும் நம்மிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பது கிடையாது. முந்தைய பட்ஜெட்டில் இதற்காக அரசு 437 கோடி தான் ஒதுக்கியிருந்தது. ஆனால் இந்த முறை அதைவிட பல மடங்கு அதிகமாக 2196 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
இதற்கிடையே வங்கிகள் மற்றும் ஃபின் டெக் நிறுவனங்கள் அதிகபட்ச பணத்தை யுபிஐ மூலம் செலுத்தும்போதாவது கட்டணம் வசூல் செய்யலாமா என முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்து இருக்கிறதாம். யுபிஐ தொடர்ந்து இலவசமாகவே மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.
தற்போது சராசரியாக தினம் தோறும் 300 மில்லியன் பரிவர்த்தனைகள் யுபிஐ வாயிலாக நடக்கின்றன. ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் தங்களுக்கு இரண்டு ரூபாய் செலவாக வங்கிகளும் நிறுவனங்களும் கூறுகின்றன . இதனால் தான் அதிகபட்ச பரிவர்த்தனைகளுக்காவது கட்டணம் வசூல் செய்யலாமே என கூறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தற்போதைக்கு யுபிஐ சேவைக்கு பயனர்களிடம் கட்டணம் வசூல் செய்ய கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம்.


Click it and Unblock the Notifications