டாடா குழுமத்தில் நீடிக்கும் அதிகார மோதல் தீர்ந்தபாடில்லை. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப்படுவதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நோயல் டாடா கடுமையாக எதிர்த்துள்ளார். செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லுபடியாகாது என அவர் கூறியுள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்றை டாடா சன்ஸ் நிறுவன செயலாளர் சுப்பிரகாஷ் முகோபாத்யாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17 அன்று நடந்த கூட்டத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரலில் (Original Agenda) சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்படுவது குறித்த விஷயம் இடம்பெறவில்லை என நோயல் டாடா கூறுகிறார். நியமனங்கள் மற்றும் ஊதிய குழுவின் விளக்கமளிக்கும் நிகழ்வு மட்டுமே முதலில் இடம்பெற்றது என்றும், திடீரென சந்திரசேகரன் மறுநியமன முன்மொழிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த தீர்மானம் செல்லாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்கு பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் தலைவரான நோயல் டாடா, இந்த கூட்டத்தில் சந்திரசேகரனின் மறுநியமனத்திற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், டாடா டிரஸ்ட்ஸின் மற்றொரு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநரான வேணு சீனிவாசன் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இவருடன் அனிதா ஜார்ஜ், ஹரீஷ் மன்வானி மற்றும் சௌரப் அகர்வால் ஆகியோரும் ஆதரவளித்தனர். இதன் காரணமாக இத்தீர்மானம் 4-க்கு 1 என்ற கணக்கில் பெரும்பான்மை பெற்றது.
ஆனால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, இத்தகைய தீர்மானம் செல்லுபடியாக வேண்டுமென்றால், டாடா டிரஸ்ட்ஸின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்களின் உறுதியான வாக்கு அவசியமானது என நோயல் டாடா குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தின் அடுத்த கட்டமாக, செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தின் எடிட் செய்யப்படாத வீடியோ பதிவை தனக்கு வழங்குமாறு நோயல் டாடா கோரியுள்ளார்.
பிப்ரவரி 20, 2027-க்கு பிறகு மற்றொரு பதவி காலத்திற்கு விண்ணப்பிக்க போவதில்லை என சந்திரசேகரன் ஆகஸ்ட் 12-ல் எடுத்த முடிவை டாடா டிரஸ்ட்ஸ் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் ஊழியர்கள், கடன் வழங்குநர்கள், வர்த்தகர்கள் மற்றும் சந்தை என அனைவரும் அதனடிப்படையில் தான் தங்கள் நடவடிக்கைகளை தொடர்கின்றன; பெரும்பான்மை பங்குதாரரும் அதை ஏற்றுக்கொண்டனர் என கூறியுள்ளார்.
சந்திரசேகரன் தனது முடிவை அறிவித்துவிட்ட நிலையில், பங்குதாரர்களும் அதை ஏற்றுக்கொண்டதால், அடுத்த கட்டத்திற்கு சென்று புது தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை டாடா சன்ஸ் தொடங்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
இதனால் என்.சந்திரசேகரன் நியமனம் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும் சந்திரசேகரனின் மனைவி பங்குகளை கொண்டுள்ள நிறுவனத்திற்கும் Hanno Infra LLP நிறுவனத்திற்கும் டாடா குழுவில் சந்திரசேகரன் நியமனத்திற்கு ஆதரவு தந்த வேணு சீனிவாசனின் டிவிஎஸ் குழுமத்திற்கும் வணிக ரீதியான டீலிங் இருப்பதாகவும் அதனை செப்டம்பர் 17 கூட்டத்திற்கு முன்பே இரு தரப்பும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications

