பெங்களூரு: மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் உடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவில் முக்கியமான 13 நகரங்களில் வீட்டு வாடகைகளின் நிலவரம் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2023 மார்ச் மற்றும் 2024 மார்ச் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட இந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை 16% அதிகரித்துள்ளது. கிரேட்டர் நொய்டா, குருகிராம் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் வீட்டு வாடகை கணிசமான உயர்வை கண்டுள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் வீட்டு வாடகை 32.1% உயர்ந்துள்ளது. குருகிராமில் 24.5%, பெங்களூருவில் 23.7% வாடகை உயர்ந்துள்ளது அதேபோல அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டு மற்றும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு இடையே ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை 2.8% உயர்ந்துள்ளது.
குறிப்பாக சென்னை, நவிமும்பை மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே சென்னையில் அதிகபட்சமாக வாடகை வீடுகளின் தேவை 24.9% உயர்ந்துள்ளது. நவி மும்பையில் 20.1%, நொய்டாவில் 19.2% என வாடகை வீடுகளுக்கான தேவை உள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் இடைப்பட்ட காலத்தில் தான் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மேஜிக் பிரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிலிருந்து அதாவது கோவிட்டிற்கு பிறகு மக்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு பணிக்கு செல்ல தொடங்கியதை அடுத்து வாடகை வீடுகளுக்கான தேவை படிப்படியாக உயர்ந்து வருவதாக உயர்ந்து வருவதையே இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது என மேஜிக் பிரிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு துறையை செய்த அபிஷேக் பாத்ரா தெரிவித்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு இந்த டிமாண்டும், வாடகை உயர்வும் நீடிக்கும் என தெரிவிக்கிறார்.
ஐடி அலுவலகங்கள் இருக்கக்கூடிய பெங்களூரு, குருகிராம், ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் கணிசமான வளர்ச்சியை பார்க்க முடிகிறது எனக் கூறுகிறார். மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை 10,000 முதல் 30,000க்கு உட்பட்ட வாடகை அளவிலேயே 42% பேர் வாடகைக்கு வீடு எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொருத்தவரை கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டு மற்றும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது வாடகை வீடுகளுக்கான தேவை 24.9% அதிகரித்துள்ளது, ஆனால் வாடகைக்கு விட தயாராக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 22.6% என குறைவாக இருப்பதாக கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications