வடக்கிலிருந்து தெற்கு வரை பறந்து விரிந்து இருக்கும் இந்தியாவில் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் அனைத்தும் ஒன்று கூடி உள்ளது. இந்த பன்முகத்தன்மை நம் நாட்டின் வலிமையாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இதை வைத்தே தற்போது பாகுபாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இதற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உதாரணமாக அமைந்தது.
நொய்டாவைத் தளமாகக் கொண்ட ஒரு ஆலோசனை நிறுவனம் தனது லிங்க்டின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் தென்னிந்தியவைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று வெளிப்படையாக அறிவித்து போஸ்ட் செய்திருந்தது. இந்த போஸ்டுக்கு பெரும் விவாதம் எழுந்தது. நொய்டாவில் உள்ள டேட்டா அனாலிடிக்ஸ் பதவிக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களை குறிவைத்து இந்த போஸ்ட் போடப்பட்டிருந்தது.

நிறுவனம் பதிவிட்டிருந்த போஸ்டில் பிற ஊழியர்களோடு சேர்ந்து பணிபுரிய வேண்டும். அனலடிக்ஸ் பற்றிய தீர்வுகளை வழங்க வேண்டும். அனைத்து வாடிக்கையாளர்களுடனும் திறம்பட செயல்பட வேண்டும் என பல்வேறு தகுதிகள் பட்டியலிடப்பட்டிருந்தது. மேலும் இந்தி மொழியில் படிக்கவும், எழுதவும் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தகுதி என்பதற்கு கீழ் குறிப்பு என கொடுக்கப்பட்டு அதில் தென்னிந்தியர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. பலரும் நிறுவனத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கத் தொடங்கினர்.
இந்நிறுவனத்தின் போஸ்டுக்கு கடும் அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் மக்களுக்கு பயந்து தற்போது இந்த நிறுவனம் வெளியிட்ட போஸ்டை டெலிட் செய்துள்ளது. நொய்டா நிறுவனத்தின் இந்த போஸ்ட்க்கு பல்வேறு கமெண்ட்ஸ் வரத் தொடங்கியது. ஒருவர் இந்த பதவிக்கு இந்தி மொழி தேவை என்பதால் தென்னிந்தியர்களை விளக்கியிருக்கலாம். இதை இந்நிறுவனம் வேறு விதமாக கூறியிருக்கலாம். இந்தி பேசி எழுதும் அனுபவம் வாய்ந்த தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறி இருந்தால் சிக்கல் ஏற்பட்டிருக்காது என்று கமெண்ட் செய்திருந்தார்.
இன்னொரு பயனர் தென்னிந்தியர்களுக்கு அனுமதியில்லை என்று நேரடியாக சொல்வது தவறு. மற்ற மாநிலங்களை பற்றி எனக்கு தெரியவில்லை என்றாலும், கேரளாவில் உள்ளவர்கள் சிறப்பாக இந்தி மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்கள் என்று போஸ்ட் செய்திருந்தார். மற்றொரு பயனர் வட இந்தியர்களுக்கு நிகராக தென்னிந்தியர்களும் இந்தி மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்தவர்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications