உலக நாடுகளின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலை துவங்க இந்தியா மிகவும் விரும்பத்தக்க நாடாக மாறியுள்ள நிலையில், அடுத்தாக டெலிகாம் உபகரணங்கள் உற்பத்தியிலும் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் இன்று பேசினார்.
இதே நேரத்தில் டெலிகாம் உபகரணங்கள் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் நோக்கியா இந்தியாவில் 5ஜி டெலிகாம் உபகரணங்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
நோக்கியா உற்பத்தி துவக்கம்
டெலிகாம் உபகரணங்கள் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் நோக்கியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் தங்கள் நிறுவனம் 5ஜி டெலிகாம் உபகரணங்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்படும் உபகரணங்கள் 5ஜி சேவை அளிக்கத் தயாராக இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி எப்போது வரும்?
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் அடிப்படையில் தான் நாட்டின் 5ஜி சேவை துவங்கப்படும். 4ஜி சேவை அறிமுகத்தின் மூலம் அதிகளவிலான வர்த்தக லாபத்தை அடைந்த இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
mMIMO கருவி தயாரிப்பு
இந்தியாவில் 5ஜி டெலிகாம் உபகரணங்களைத் தயாரிக்கும் முதல் நிறுவனமான நோக்கியா தற்போது mMIMO என்னும் உபகரணத்தைத் தயாரித்து வருகிறது. இந்திய திறமைகள் மற்றும் எங்கள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பத்தின் மீது அதிகளவிலான நம்பிக்கை வைத்துள்ள காரணத்தால் இது சாத்தியப்பட்டு உள்ளது.
சஞ்சய் மாலிக்
மேலும் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இந்திய டெலிகாம் சந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நோக்கியா செய்ய முடியும் என நோக்கிய நிறுவனத்தின் உயர் துணை தலைவர் மற்றும் இந்திய வர்த்தகத்தின் தலைவரான சஞ்சய் மாலிக் இந்நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை நோக்கியா தொழிற்சாலை
தற்போது நோக்கியா தயாரிக்கப்படும் அதிநவீன mMIMO உபகரணம் அனைத்தும் சென்னையில் இருக்கும் நோக்கியா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
600 கோடி ரூபாய் முதலீடு
2008 முதல் இந்தியாவில் டெலிகாம் உபகரணங்களைத் தயாரிக்கும் நோக்கியா சுமார் 50 லட்ச உபகரணங்களைத் தயாரித்துள்ளது. இதில் 50 சதவீத உபகரணங்களைச் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 2008ல் இருந்து சென்னை தொழிற்சாலையில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்துள்ளது நோக்கியா.


Click it and Unblock the Notifications