உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமாக இருந்த நோக்கியா தற்போது முன்னணி டெலிகாம் கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து மாபெரும் செலவின குறைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் 5ஜி சேவை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் டெலிகாம் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கீடு மிகவும் முக்கியமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை துறை துவக்க நிலையில் இருக்கும் காரணத்தால் நோக்கியாவின் பங்கீடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். நோக்கியா சென்னையில் மாபெரும் தொழிற்சாலையை கொண்டு இயங்கி வருகிறது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து நோக்கியா தனது செலவின குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
பின்லாந்து நாட்டு நிறுவனமான நோக்கியா, சவாலான சந்தை சூழலைநிலையை எதிர்கொள்ள செலவுகளை குறைத்து, செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 800 மில்லியன் யூரோ-வில் துவங்கி 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.2 பில்லியன் யூரோ வரையிலான செலவுகளை குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த செலவின குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தான் தற்போதுள்ள 86,000 ஊழியர்களின் எண்ணிக்கை 72,000 முதல் 77,000 வரை குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த கடுமையான முடிவை எடுக்கும் அளவுக்கு நோக்கியா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை என்ன..
Nokia நிறுவனம் மூன்றாம் காலாண்டில் நிகர விற்பனை அளவு வருடாந்திர அடிப்படையில் 20% குறைந்து 4.98 பில்லியன் யூரோக்களாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக தான் 14000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது. இந்த செப்டம்பர் காலகட்டத்தில் லாப அளவுகளும் வருடாந்திர அளவில் 69% சரிந்து 133 மில்லியன் யூரோ மட்டுமே பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர்களில் ஒருவரான நோக்கியா, மந்தமான சர்வதேச பொருளாதாரம் மற்றும் மொபைல் ஆபரேட்டர்களால் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு செலவினக் குறைப்பு ஆகியவற்றிலிருந்து தனது நிறுவனத்தை பாதுகாக்க போராடி வருகிறது.


Click it and Unblock the Notifications