டெல்லி: அரசு ஊழியர்களில் சரியாக வேலை செய்யாதவர்கள் முன்கூட்டியே ஓய்வு வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையின் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை பல்வேறு அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் ஒரு ஆணையை அனுப்பி வைத்துள்ளது.
இதன்படி பொதுத்துறை நிறுவனங்கள் ,அரசு வங்கிகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், அமைப்புகளில் செயல்படும் ஊழியர்களின் பணித் திறனை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வப்போது அரசு ஊழியர்களின் பணித்திறனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்களின் பணித்திறன் எதிர்பார்த்த அளவு இல்லை என்றால் அவர்களுக்கு பொது நலன் கருதி முன்கூட்டியே ஓய்வு அளித்து அனுப்பி விட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சகங்களும் முகமைகளும் தங்களுக்கு கீழ் செயல்படும் ஊழியர்களின் செயல் திறன்களை அடிக்கடி ஆய்வு செய்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த ஆணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அவ்வப் போது அமைச்சக அதிகாரிகளுக்கு இந்த அறிவுரைகளை வழங்கினாலும் பெரும்பாலான அமைச்சகங்களும் துறைகளும் இதனை பின்பற்றுவதில் என தெரிகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்களின் செயல்திறன் குறித்து தங்களுக்கு முழுமையான அறிக்கைகள் வருவதில்லை என இந்த துறையை சார்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2020 ஆம் ஆண்டிலேயே பணியாளர் மற்றும் பயிற்சி துறை இந்த ஆணையை அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இருந்தாலும் தற்போது இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது. இவ்வாறு பணியில் சுணக்கம் காட்டும் ஊழியர்கள் முன்கூட்டியே ஓய்வூதியம் அளித்து அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் ஊழியர்களின் செயல்திறன் அறிக்கையை அனைத்து துறைகளும் சமர்ப்பிக்க வேண்டியது புதிய ஆணை மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதையும் அரசின் உத்தரவுகள் உடனடியாக செயல்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.
இதற்காகவே சிசிஎஸ் (பென்சன்) விதியில், விதி எண் 42இல் மாற்றம் கொண்டு வந்திருப்பதாக பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது. அதாவது சரியாக செயல்படாத ஊழியர்களை முன் கூட்டியே ஓய்வுக்கு அனுப்புவது தொடர்பாக இந்த விதி மாற்றப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. அரசு ஊழியர்கள் வருகை நேரம், வேலை செய்யும் திறன் ஆகிய அனைத்தும் இனி கண்காணிப்பு வளையத்துக்குள் வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications