ஸோஹோ நிறுவனம் நேரடியாக செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபடவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ஸோஹோ நிறுவனம் செமிகண்டக்டர் துறையில் முதலீடு மட்டுமே செய்கிறது, செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.
செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபடக்கூடிய சில் எலக்ட்ரிக் (Silectric) என்ற நிறுவனத்தில் ஸோஹோ கார்ப்பரேஷன் முதலீடு செய்திருப்பதாகவும் சில் எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்காக மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் செமிகண்டக்டர் துறையில் ஸோஹோவிற்கு எந்த ஒரு அனுபவமும் நிபுணத்துவமும் கிடையாது எனக் கூறியுள்ளார். எங்களுக்கு மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் மட்டுமே தெரியும் செமிகண்டக்டர் பற்றி தெரியாது எனவே நாங்கள் செமிகண்டக்டர் துறையில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் முதலீடு மட்டுமே செய்து இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக ஸோஹோ நிறுவனத்தின் செமிகண்டக்டர் ஆலை ஒடிசாவில் அமைக்கப்பட இருப்பதாக ஒரு செய்தி பரவியது . இது தொடர்பாக ஸோஹோ நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் அரசு இந்த விண்ணப்ப படிவத்தினை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தான் ஸ்ரீதர் வேம்பு தங்களது நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபடவில்லை மாறாக அதில் செயல்படக்கூடிய ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் மத்திய அரசிடம் தங்களுடைய ஆலையை அமைப்பதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளதாகவும், என்ன மாதிரியான தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் இயங்கப் போகிறது என்பன உள்ளிட்ட கேள்விகள் மத்திய அரசின் தரப்பில் இருந்து எழுப்பப்பட்டுள்ளதாகும் அவர் கூறியுள்ளார்.
சில் எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்ற பிறகு ஆற்றல் மின்னணுவியல் பிரிவில் தேவையான செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
முன்னதாக ஸ்ரீதர் வேம்பு உடன் படித்த இரண்டு பேர் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஸ்ரீதர் வேம்பு தங்களது ஸோஹோ நிறுவனம் சார்பில் இதுவரை 18 டேட்டா மையங்களை நிறுவி இருப்பதாக தெரிவித்துள்ளார் தற்போதைக்கு இந்தியாவில் இந்த நிறுவனம் மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் டேட்டா மையங்களை நிறுவியுள்ளது கூடிய விரைவில் பல்வேறு இடங்களில் டேட்டா மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications