பாகிஸ்தான் நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், பொருளாதாரத்தை திவால் ஆகாமல் காக்கவும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் பாகிஸ்தான் அரசுக்குக் கடந்த வாரம் ஐஎம்எப அமைப்பில் இருந்து 7 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கடனை பெற பாகிஸ்தான் அரசுக்கு 6 அமைச்சகங்களை மொத்தமாக மூடவும், 1.5 லட்சம் அரசுப் பணிகளை நீக்கவும், 2 அமைச்சகங்களை இணைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தை காப்பாற்ற வேறு வழி இல்லாமல் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகப் பாகிஸ்தான் நிதியமைச்சர் முஹம்மது அரங்கசேப் வெளியிட்டார். ஐஎம்எப் அமைப்பிடம் கடனுக்கான ஒப்புதல் பெற்ற பின்பு அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்த அவர் பல முக்கியமான விதிமுறைகளையும், மாற்றங்களையும் அந்நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

இனி வரும் காலகட்டத்தில் பாகிஸ்தான் அரசு வரி வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் என அதிரடியாக தெரிவித்தார். கடந்த ஆண்டு சுமார் 3,00,000 புதிய வரி செலுத்துபவர்கள் வருமான வரி வலையில் சேர்க்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை 7,32,000 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் மொத்த வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டுக்கொண்டு வரும் பாதையில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது முதல் படியாக இருக்கும் என கூறிய அவர், அடுத்ததாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இனி பாகிஸ்தான் நாட்டில் வரி செலுத்தாதவர்கள் என்ற பிரிவு பெரிய நிதி பரிமாற்றத்தில் இருந்து நீக்கப்படும். இதனால் வருமான வரி செலுத்தாதவர்கள் நிலம் அல்லது வாகனங்கள் வாங்க முடியாது என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் முஹம்மது அரங்கசேப் கூறினார். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து கடன் பெற வேண்டும் என்பதற்காகக் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பல மாற்றங்களைப் பாகிஸ்தான் அரசு செய்துள்ளது. இதனால் தற்போது பாகிஸ்தான் பொருளாதாரம் சரியான திசையில் நகர்ந்து வருகிறது என்றும், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து, அதிகபட்ச நிலையை எட்டியுள்ளதாகவும் அரங்கசேப் கூறினார்.
மேலும் பாகிஸ்தான் நாட்டின் ஏற்றுமதி மற்றும் IT ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது தான் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் பாகிஸ்தான் நிதியமைச்சர் முஹம்மது அரங்கசேப் கூறினார்.
பாகிஸ்தான் நாட்டில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, கடனுக்கான வட்டி விகிதத்தை 4.5 சதவீதத்திற்குக் குறைத்துள்ளது அந்நாட்டில் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி விதைப்போடு உள்ளது. 2023ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications