அமெரிக்கா: அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street journal) வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது தலைமை செயல் அதிகாரிகளுக்கு ஊதியம் மட்டுமில்லாமல் தங்கள் நிறுவன பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையும் வழங்குகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறக்கூடிய தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த நிகேஷ் அரோரா இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். பாலோ ஆல்டோ நெட்வொர்க் (Palo alto networking) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் நிகேஷ் அரோராவுக்கு கிடைக்கும் ஊதியம் மற்றும் பிற கொடுப்பனவுகள் ஓர் ஆண்டுக்கு மொத்தம் 151.43 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் முதல் 500 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 17 பேர் இடம் பிடித்துள்ளனர். அடோப் (Adobe) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சாந்தனு நாராயணன் இந்த பட்டியலில் 11ஆம் இடத்தில் இருக்கிறார். அவருக்கு கிடைக்கும் மொத்த ஊதியம் 44.93 மில்லியன் டாலர்கள் ஆகும்.
அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க், காம்பன்சேசன் (Compensation)எனப்படும் ஊதிய முறையில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். எனவே அவர் பெயர் இதில் இடம்பெறவில்லை.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிகேஷ் அரோரா, டெல்லி ஏர்ஃபோர்ஸ் பப்ளிக் ஸ்கூல்-இன் முன்னாள் மாணவர். ஐஐடி-இல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பிடெக் பயின்றவர். நிகேஷ் அரோரா கூகுள் நிறுவனத்தின் சிறப்பு வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்தவர். 2014 ஆம் ஆண்டு இவர் கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர் ஜப்பானை சேர்ந்த சாஃப்ட்பேங்க்(Softbank) நிறுவனத்தின் தலைவராக தேர்வானார். அங்கிருந்து விலகிய இவர் 2018 ஆம் ஆண்டிலிருந்து சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
கூகுளின் சுந்தர் பிச்சை மற்றும் மெடாவின் மார்க் ஸக்கர்பர்க்கை விட அதிகமாக வருவாயிட்டும் தலைமை செயல் அதிகாரியாக நிகேஷ் அரோரா திகழ்கிறார். இவர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் போதே 51 மில்லியன் டாலர்களை ஊதியமாக பெற்றார் . 2012ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் அதிக ஊதியம் பெறும் நபராக இவர் இருந்தார். பின்னர் சாஃப்ட் பேங்க் நிறுவனத்தில் இவருக்கு ஊதியமாக 135 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பர்க் 24.40 மில்லியன் டாலர்களை மட்டுமே காம்பன்சேசனாக பெற்றுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய சுந்தர் பிச்சை 8.8 மில்லியன் டாலர்களை மட்டுமே பெற்று இருக்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications