ஈரோடு: மஞ்சள் மாநகரமான ஈரோடு தற்போது புதிய சாதனை படைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கொரோனா பாதிப்புக்கு பிறகு மாநிலத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில் கொரோனாவின் வேகம் மிக வேகமாக பரவி வந்த நிலையில், அதே வேகத்தில் தற்போது கொரோனாவின் பாதிப்பும் குறைந்து விட்டது.
மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் ஒரு முதியவர் மட்டும் இறந்த நிலையில், மீதம் இருக்கும் 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா இல்லாத மாவட்டம்
இதனால் தற்போது ஈரோடு கொரோனா இல்லாத இல்லாத இரண்டாவது மாவட்டமாக மாறியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 22ம் தேதி 65 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதிய தொற்று இல்லை
இந்த நிலையில் தற்போது மீதமிருக்கும் 4 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதில் என்ன நல்ல விஷயம் எனில் கடந்த பல நாட்களாகவே புதிய தொற்றுகள் ஏற்படவில்லை. இதனால் முன்பு கொரோனாவால் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்தவர்களை தவிர, புதியதாக யாருக்கும் தொற்று இல்லை என்றும் உறுதிபடுத்தப்பட்டது.
துரித நடவடிக்கை
முதன் முதலாக தாய்லாந்து பயணி மூலமாக ஈரோட்டில் நுழைந்த கொரோனா, பின்னர் டெல்லி சென்ற வந்தவர் என சிலருக்கு தொற்று ஏற்பட்டது. பிறகு இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், மிக வேகமாக பரவ ஆரம்பித்தது. எனினும் அரசின் நடவடிக்கையினால் மிக வேகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்கள் முதல் கொண்டு தனிமைபடுத்தப்பட்டது. இவ்வாறு துரித நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சமூக பரவல் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
அனுமதி இருக்குமா?
அதெல்லாம் சரி? இப்போது தான் கொரோனா இல்லை என்றாகி விட்டதே. இனியாவது சிறு சிறு நிறுவனங்களையாவது செயல்பட அனுமதிக்கலாமே என்று கேட்கிறீர்கள் சிறு வியாபாரிகள். ஈரோட்டினை பொறுத்த வரையில் மஞ்சள் மாநகரம் அதனால் இங்கு விவசாயம் தான் முக்கிய பணி என்று மட்டும் அல்ல, அதனையும் தாண்டி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்ககணக்கான மின்சார தறிகள், நூல் வியாபாரம், டெக்ஸ்டைல்ஸ், எண்ணெய் மண்டிகள், சர்க்கரை ஆலைகள், நெசவு என பல தொழில்கள் உள்ளன.
ஊரடங்கு தளர்த்தல் இருக்குமா?
இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று ஊரடங்கு தளர்த்தல் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாட உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது ஈரோடு தான் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதால், குறைந்த பட்சம் சிறு குறு வியாபாரம், வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications