இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருமானம் ஈட்டக்கூடிய மிடில் கிளாஸ் குடும்பங்களின் வரிச்சுமை குறைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 2023- 2024 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மீதான வரிச் சுமை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான அளவு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.அதே வேளையில் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
2013- 2014 நிதியாண்டில் இருந்து 2023 - 2024 ஆம் நிதியாண்டு வரையிலான இந்த பத்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டக்கூடிய நபர்களின் எண்ணிக்கை 1.9 லட்சத்திலிருந்து 9.4 லட்சம் என அதிகரித்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளில் நாட்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய தனிநபர்கள் நாட்டுக்காக செலுத்தும் வரி விகிதமும் அதிகரித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் இது 2. லட்சம் கோடி ரூபாயாக இருந்து தற்போது 9.6 லட்சம் கோடி ரூபாய் என 3.2 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது நாட்டில் வசூலிக்கப்படும் வருமான வரியில் கிட்டத்தட்ட 76 சதவீத வரி ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய நபர்களிடமிருந்து தான் வசூலிக்கப்படுகிறது என Jagran josh தளம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரித்துறை சார்பாகவும் மத்திய அரசு சார்பாகவும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளே காரணம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக நிதி பரிவர்த்தனைகளை ஒழுங்கமைத்தது , வரி எய்ப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக அதிகமாக வருமானம் பெறுபவர்கள் தற்போது முறையாக வருமான வரி செலுத்துகின்றனர் என்கிறது இந்த ஆய்வு அறிக்கை.
அதேபோல 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் மீட்டியவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் அதன் பிறகு பல்வேறு விலக்குகள் வழங்கப்பட்டதால் தற்போது ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்த ஒரு வரியையும் செலுத்த வேண்டிய தேவையில்லை. எனவே 2014 ஆம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருமானம் ஈட்டியவர்கள் 10.2 சதவீத வருமானவரி பகிர்வை கொண்டிருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் அது 6.2 சதவீதம் என குறைந்திருக்கிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications