சென்னை: சென்னையில் அதிக விலை மதிப்பு கொண்ட வீடுகளின் விற்பனை அமோகமாக இருப்பது ஒரு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. பொதுவாகவே இந்தியாவின் பெரு நகரங்களான சென்னை, பெங்களூர், மும்பை டெல்லி ஆகியவற்றில் வீடுகளின் விலை ஆண்டுதோறும் கணிசமான அளவு உயர்ந்து வருகிறது.
தற்போதைக்கு இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்குவது என்றால் கூட குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் தேவை என்ற சூழல் வந்துவிட்டது.

நைட் ஃபிரான்க் (Knight Frank) என்ற நிறுவனம் சென்னையில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் குறிப்பாக வீடுகள் விற்பனை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி சென்னையில் வீடு வாங்குபவர்கள் அதிக இடம் கொண்ட வீடுகளையும், குறிப்பாக அதிக மதிப்பு கொண்ட வீடுகளையும் வாங்க விரும்புவது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சென்னையில் 80 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதாம்.
கடந்த ஆறு மாத காலத்தில் சென்னை நகரில் நடந்த வீடு விற்பனையில் 28% வீடுகள் இந்த விலைமதிப்பிற்குள் வருகின்றன என நைட் ஃப்ரான்க் அறிக்கை தெரிவிக்கிறது. சென்னையில் கடந்த ஓராண்டு காலத்தில் குடியிருப்புகளின் விற்பனை என்பது 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.
அதே போல அலுவலக இடங்களுக்கான வர்த்தகம் என்பது மூன்று மில்லியன் சதுர அடி என்ற அளவை எட்டியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டில் முதல் ஆறு மாத காலங்களில் 7,975 வீடுகள் விற்பனை செய்யப்பட்டன . அதுவே இந்த ஆண்டில் 7,120 வீடுகள் என இருக்கிறது.
குறிப்பாக 50 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை விலை மதிப்பு கொண்ட வீடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. சென்னையில் 2024ஆம் ஆண்டில் முதல் ஆறு மாத காலத்தில் நடந்த வீடுகளின் விற்பனையில் 44 சதவீத வீடுகள் இந்த விலை மதிப்பீட்டில் இருக்கக்கூடியவை.
நைட் பிரான்க் இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குனரான ஸ்ரீநிவாஸ் அணிக்கிப்பட்டி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் சென்னையில் வீடுகளின் மதிப்பு என்பது 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
அதாவது ஒரு சதுர அடிக்கு சராசரி விலை என்பது 4,560 ரூபாய் என்ற அளவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார் . இதனிடையே கட்டுமான மூலப்பொருட்களுக்கான விலை உயர்ந்தது தான் வீடுகளின் விலை உயர்வுக்கு காரணம் என கட்டுமான சங்கத்தின் தலைவரான பிரகாஷ் ராமதாஸ் கூறுகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications