இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பெரும் புரட்சி செய்த UPI தொழில்நுட்பத்தைத் தென் அமெரிக்க கண்டத்தில் முதல் நாடாகப் பெரு (Peru) ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தை NPCI இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், பெரு நாட்டு மத்திய ரிசர்வ் வங்கியுடன் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், பெரு நாட்டில் உடனடி பண பரிவர்த்தனைக்கான நம்பகமான தளத்தை அறிமுகப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வர அந்நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தியா உதவ உள்ளது. இதன் பயனாக, பெரு நாட்டில் ரொக்க பணத்தை நம்பியிருக்கும் பழக்கம் குறைந்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசு உருவாக்கிய UPI தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் பயன்படுத்தவும், பரப்பவும் NPCI நிறுவனத்தின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது பெரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த மாதம், நாமிபியா நாட்டு வங்கியுடன் இதே போன்ற ஒப்பந்தத்தை NPCI செய்துள்ளது. மேலும், ஃ பிப்ரவரி மாதத்தில் இலங்கையில் UPI சேவைகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம், இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கையில் உள்ள கடைகளில் QR குறியீடு மூலம் UPI செயலிகள் வழியாக பணம் செலுத்த முடியும்.
அதேபோல், மொரிஷியஸ் நாட்டிலும் UPI செயலிகள் மற்றும் RuPay கார்டுகள் மூலமான பண பரிவர்த்தனை சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொரிஷியஸ் நாட்டு வங்கிகள் RuPay கார்டுகளை வழங்க முடியும்.

இதன் மூலம், ஆசியாவிற்கு வெளியே முதன் முதலாக RuPay தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்டு வழங்கும் நாடாக மொரிஷியஸ் மாறியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் மே 30 ஆம் தேதியிட்ட ஆண்டு அறிக்கையின்படி, விகசித் பாரத் 2047 திட்டத்தின் கீழ் 20 நாடுகளில் UPI சேவையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முயற்சிகளை மேற்கொள்ளும். 2025 நிதிய ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2029 நிதிய ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications