இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளிடம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக, தேசிய கொடுப்பனவு கழகமான NPCI புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. யூபிஐ வியாபார் சக்சம் (UPI Vyapaar Saksham Scheme) என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் யூபிஐ பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு ஊக்க தொகை கிடைக்கும்.
இந்தியாவின் சிறு நகரங்களில் உள்ள சிறு வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் கடைகளில் கியூஆர் கோடு மற்றும் Soundbox சாதனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் ஏராளமான வணிகர்கள் யூபிஐ அமைப்பில் இணைவார்கள். எனவே இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேலும் மேலும் வளர்ச்சி அடையும்.

UPI Vyapaar Saksham திட்டத்தின் கீழ் புதிய வணிகர்களை யூபிஐ அமைப்பில் இணைப்பதற்கும், பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. புதிதாக சிறு வியாபாரிகளின் கடைகளில் வைக்கப்படும் ஒவ்வொரு கியூஆர் கோடுக்கும் (Physical QR Code) வங்கிகளுக்கு 300 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
யூபிஐ மூலம் வியாபாரிகள் பணம் பெறும்போது குரல் மூலம் உடனடியாக தெரிவிக்கும் சவுண்ட்பாக்ஸ் சாதனங்களை வழங்கும் வங்கிகளுக்கு ஒவ்வொரு சாதனத்திற்கும் 750 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் முதல் 1 கோடி புதிய கியூஆர் கோடுகளையும், 5 லட்சம் முதல் 10 லட்சம் புதிய சவுண்ட்பாக்ஸ் சாதனங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர NPCI இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஊக்கத்தொகையானது நேரடியாக வியாபாரிகளுக்கு கிடைக்காது. அவர்களுக்கு யூபிஐ சேவை வழங்கும் நிறுவனத்திற்கு சென்றுவிடும். பொதுவாக இந்த கட்டணத்தை வியாபாரிகளும் ஃபின் டெக் நிறுவனங்களுமே ஏற்று வந்த நிலையில் அரசு அதனை ஊக்க தொகையாக மாற்றியுள்ளது. எனவே வியாபாரிகள் புதிதாக யூபிஐ பயன்படுத்த தொடங்கும் போது ஆகும் செலவில் குறிப்பிட்ட தொகை மிச்சமாகிறது.
இத்திட்டத்திற்கான நிதி, யுபிஐ Merchant Discount Rate வசூல் தொகையிலிருந்து உருவாக்கப்படும் தொகுப்பிலிருந்து பெறப்படுமாம். முந்தைய நிதியாண்டில் 40 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்ட சிறி வியாபாரிகள் புதிதாக யூபிஐ பயன்படுத்த தொடங்கினால் இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற தகுதி பெறுவார்கள்.இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும், முறைகேடுகளை தவிர்க்கவும் NPCI சில கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது.
வங்கிகள் ஒவ்வொரு தகுதியான வியாபாரிக்கும் அவர்களின் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டு ஒரு தனித்துவமான வணிக அடையாள எண்ணை வழங்க வேண்டும். கடைகளின் உண்மையான இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் கடைகளின் புவியியல் ஒருங்கிணைப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும். தொடர்ந்து 90 நாட்களூக்கு யூபிஐ மற்றும் சவுண்ட் பாக்ஸ் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை எளிதில் மேம்படுத்தி கொள்ளவும், நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் யுபிஐ சேவையைத் தடையின்றி கொண்டு சேர்க்கவும் என்பிசிஐ எடுத்துள்ள ஒரு முக்கியமான முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

