டெல்லி: என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஏப்ரல் 1முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய காலத்திற்கான பணத்தை சேமிக்க வைக்க ஏதுவாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டம் தான் தேசிய பென்சன் திட்டம். இது என்பிஎஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் முதலீடு செய்பவர்கள் என்பிஎஸ் தளத்தில் லாகின் செய்து தங்களின் கணக்கு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்த லாகின் நடைமுறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

என்பிஎஸ் திட்டத்தில் லாகின் செய்வதற்கு வழக்கமாக லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும். ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இரண்டு அடுக்கு அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே உங்களின் கணக்கில் லாகின் செய்ய முடியும். PFRDA எனப்படும் பென்ஷன் ஃபண்டு ரெகுலேட்டர் அண்ட் டெவலப்மெண்ட் அதாரிட்டி , என்பிஎஸ் கணக்கில் லாகின் செய்யும் முறையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி என்பிஎஸ் கணக்கில் லாகின் செய்பவர்கள் இரண்டு அடுக்கு அங்கீகாரத்தை செய்தால் மட்டுமே லாகின் செய்ய முடியும். என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு, பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மட்டுமில்லாமல் அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ஓடிபி-ஐ உள்ளீடு செய்தால் மட்டுமே என்பிஎஸ் கணக்கில் லாகின் செய்ய முடியும்.
ஓடிபி-ஐ உள்ளீடு செய்யாவிட்டால் லாகின் செய்ய முடியாது என தெரிவித்துள்ள PFRDA, என்பிஎஸ் கணக்கில் லாகின் செய்யும் போது ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை கையில் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளது.
என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மட்டும் கொடுத்தாலே லாகின் செய்து கொள்ள முடியும். ஆனால் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு இரண்டு அடுக்கு அங்கீகாரம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
உங்கள் என்பிஎஸ் கணக்கை காண முதலில் என்பிஎஸ் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் லாகின் என்பதை கொடுத்து ஐபின் அல்லது பிஆர்ஏஐஎன் (IPIN /PRAIN) நம்பரை கொடுக்க வேண்டும். இதனை அடுத்து வரும் பக்கத்தில் உங்களது என்பிஎஸ் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும். பின்னர் உங்களது செல்போனுக்கு வரும் ஓடிபி கொடுத்தால் மட்டுமே உங்களது என்பிஎஸ் கணக்கை காண முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications