ஆசியாவிலேயே மிகவும் முக்கிய முதலீட்டு சந்தையாகவும் அதேவேளையில் காஸ்ட்லியான பகுதியாகவும் இருக்கும் சிங்கப்பூரில் வெளிநாட்டினருக்கு அந்நாட்டு அரசு செக் வைத்துள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கம், அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையை கட்டுக்குள் கொண்டு வரவும், ரியல் எஸ்டேட் விலைகளை குறைக்கும் முயற்சியிலும், பெரு நகரங்களில் வீடு வாங்கும் வெளிநாட்டினருக்கான முத்திரைக் கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. இப்புதிய விதிமுறை ஏப்ரல் 27 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் சிங்கப்பூரில் வீடு வாங்க திட்டமிடும் என்ஆர்ஐ-கள் முத்திரைதாள் கட்டணத்தை இரண்டு மடங்கு செலுத்த வேண்டும். இது பல நடுத்தர வெளிநாட்டினரை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதை தடுக்கும். என்ஆர்ஐ-களுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
சிங்கப்பூர் அரசின் இந்த இரட்டிப்பு கட்டண உயர்வு என்பது ஒரு நிலையான ரியல் எஸ்டேட் சந்தையை உருவாக்குவது மட்டும் அல்லாமல் உள்நாட்டினருக்கான வீட்டு வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டினருக்கு பின்னடைவாக அமைந்தாலும், அந்நாட்டு குடிமக்களிடம் அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன் மூலம் சிங்கப்பூர் அரசு வெளிநாட்டினருக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதேபோல் சிங்கப்பூர் குடிமக்கள் 2வது வீட்டை வாங்குவோருக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 3வது வீட்டை வாங்குவோருக்கான முத்திரைத்தாள் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதைவிட முக்கியமாக சிங்கப்பூர் குடிமக்கள் தங்களின் முதல் சொந்த வீட்டை வாங்கும் போது எவ்விதமான முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதேபோல் கணவன், மனைவி யாரேனும் ஒருவர் சிங்கப்பூர் குடிமக்களாக இருக்கும் போது முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்தி விட்டு அதை முறையாக விண்ணப்பம் கொடுத்து Refund பெறலாம்.
சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் நாளுக்கு நாள் காஸ்ட்லியாக மாறி வரும் வேளையில் சாதாரண மக்கள் சொந்த வீடு வாங்க முடியாத அளவுக்கு நிலைமை மாறி வருவது மட்டும் அல்லாமல் வெளிநாட்டினர், பணக்காரர்கள் மட்டுமே அதிகம் வாங்குவதால் கூடுதல் பிரச்சனை உருவாகி வருகிறது.
இது மட்டும் அல்லாமல் சிங்கப்பூர் அரசு வீட்டுக் கடன்களை அளிப்பதிலும் அதிகப்படியான கட்டுப்பாடுகளை கடந்த சில ஆண்டுகளாகவே விதித்து வருகிறது.


Click it and Unblock the Notifications