ஹவாய்: சுதந்திரத்திற்கு முன்னரே பல்வேறு இந்தியர்களும் வெளிநாடுகளில் வெற்றிகரமாக தொழில் புரிந்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவின் ஹவாய் தீவில் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறது.
கடந்த 1915 ஆம் ஆண்டு 29 வயதான ஜமந்தாஸ் வாடுமுல் தன்னுடைய கூட்டாளி தரம்தாசோடு இணைந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு சென்றார். அங்கு இருவரும் இணைந்து சில்லறை விற்பனை கடையை நிறுவினர். ஜமந்தாஸ் & தரம்தாஸ் ஸ்டோர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கடையில் பட்டு மற்றும் யானை தந்தங்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், பித்தளை பொருட்கள் மற்றும் பிற அரிய கலைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

ஆனால் கடை தொடங்கிய ஒரே ஆண்டில் தரம்தாஸ் திடீரென காலமானார். இதனை அடுத்து ஜமன்தாஸ் தன்னுடைய சகோதரர் கோவிந்தராமை ஹவாய் தீவுக்கு வரவழைத்து அந்த கடையை நிர்வகிக்க வைத்தார். சகோதரர்கள் இருவரும் தங்களுடைய கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தை பெரிய அளவில் வளர்த்தனர். தற்போது ஹவாய் தீவில் வாடுமுல் குழுமம் ஆடை உற்பத்தி , ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில்களில் கால் பதித்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஹவாய் தீவுக்கு குடி பெயர்ந்த முதல் தெற்காசிய குடும்பம் ஜமந்தாஸ் வாடுமுல் குடும்பம் என சொல்லப்படுகிறது. தற்போது ஹவாய் தீவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக இவர்கள் இருக்கின்றனர்.
ஜமன்தாஸ் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதாக இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். எனவே ஜவுளி ஆலைகளில் இவர் வேலைக்கு சென்றாராம்.
அது தான் பின்னாளில் பெரிய தொழில் குழுமத்தை நிறுவ இவருக்கு உதவியுள்ளது. ஹவாய் தீவில் இவர்களின் கடை ஈஸ்ட் இந்தியா ஸ்டோர் என அழைக்கப்படுகிறது.
ஹவாய் தீவு பிரபல சுற்றுலா தலமாக உருவானதை இவர்கள் சாதகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே ஹவாய் சட்டைகளை வடிவமைத்து விற்க தொடங்கினர். ஹவாய் தீவில் கிடைக்கும் பூக்கள் மற்றும் செடிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் அலோகா சட்டைகளை வடிவமைத்து விற்பனை செய்ய தொடங்கினர்.
இங்கே வடிவமைக்கப்பட்டு இவை ஜப்பானுக்கு அனுப்பி வைத்து பட்டு துணிகளின் மீது அச்சிடப்பட்டு ஹவாய் சட்டைகள் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது. இன்றளவும் ஹவாய் சட்டைகள் என்றால் சர்வதேச அளவில் பிரபலமாக பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது.
1956 இல் ஜமன்தாஸ் குடும்பம் ஹவாய்க்கு நிரந்தரமாக குடிப்பெயர்ந்தது. இவர்கள் இந்திய சுதந்திர போரின் போது போராட்ட தலைவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்களாம், இதற்காக வாடுமுல் அறக்கட்டளையை தொடங்கினர், பல்வேறு இந்திய தலைவர்களும் அமெரிக்கா சென்றால் இவர்களின் வீட்டில் தான் தங்குவார்களாம் முக்கிய ஆலோசனைகளை நடத்துவார்களாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் சில்லறை விற்பனை கடைகளை மூடிவிட்டனர். தற்போது ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவில் கவனம் செலுத்துகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications