சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் எல்லாம் சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவது கனவாக மாறிவிடும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு ரியல் எஸ்டேட் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நகரின் மையப் பகுதி என மட்டும் இல்லாமல் புறநகர் பகுதிகளில் கூட அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பல மடங்காக உயர்ந்துவிட்டன.
நகரின் மையப் பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் தேவைப்படும் என்ற நிலையில் இருந்து தற்போது புறநகர் பகுதிகளில் வீடு வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கட்டுமான செலவினம் உயர்ந்தது மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மலிவு விலை வீடுகளில் கவனம் செலுத்தாமல் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் மீது கவனம் செலுத்துவதே இதற்கு மற்றொரு காரணம்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் திடீரென தங்களுடைய கவனத்தை மலிவு விலை வீடுகளில் இருந்து ஆடம்பர வீடுகளின் பக்கம் திருப்புவதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதே காரணம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் மிடில் கிளாஸ் மக்கள் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்குவது கூட தற்போது கனவாக மாறி வருகிறது. இதனிடையே ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவில் "வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்திய நகரங்களில் அப்பார்ட்மெண்டுகள் வாங்குவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
நான் அண்மையில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்காக பார்த்தபோது மூன்று படுக்கையறை கொண்ட ஒரு வீட்டின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்னர் நான் லண்டன் , நியூயார்க் நகரங்களில் சரி பார்த்தேன் அங்கேயும் கிட்டத்தட்ட இதே விலைக்கு தான் வீடுகள் இருக்கின்றன" என கூறியுள்ளார்.
இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வேண்டுமென்றே ஒரு தேவையை உருவாக்கி உங்களை இங்கே வீடுகளை வாங்க தூண்டுகின்றன, தயவு செய்து அவர்கள் கூறும் விலைக்கு அப்படியே வீடுகளை வாங்காதீர்கள் விலையை குறைத்து பேசுங்கள், இல்லையெனில் உங்களுடைய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
ஒரு பயனர் நான் பெரிய பணக்காரன் கிடையாது எனக்கு பெங்களூருவில் சின்னதாக ஒரு குடியிருப்பு வாங்க வேண்டும் என ஆசை ஆனால் தற்போது குடியிருப்புகளின் விலையை கேட்டால் எனக்கு தலையை சுற்றுகிறது எனக் கூறியுள்ளார்.
டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கையால் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் பலரும் நாடு திரும்புவார்கள் அவர்களால் இந்தியாவில் மேலும் ரியல் எஸ்டேட் மதிப்பு உயரும் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார். ஒரு பயனர் இனி ரியல் எஸ்டேட் மதிப்பு குறைவதற்கான வாய்ப்பு இல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க தான் போகிறது என பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications