விலை வாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாளுக்கு நாள் நமது செலவினங்கள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. மளிகை செலவுகள், மருத்துவ செலவுகள் என நமக்கு நினைவு தெரிந்ததில் இருந்து ஒப்பீடு செய்தாலே பல மடங்கு உயர்ந்திருப்பது தெரிகிறது.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் குடும்பங்களின் சராசரி மாதாந்திர செலவுகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NSSO எனப்படும் National Sample Survey Office நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2023 ஜூலை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் கிராமப்புறங்களில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஆகும் செலவினம் 3,773 ரூபாய் என தெரிய வந்துள்ளது. இது நகர்ப்புறங்களில் ஒரு குடும்பத்திற்கு ஆகும் சராசரியான மாதாந்திர செலவினம் 6,459 ரூபாய் ஆகும்.
பொதுவாக கிராமப்புற செலவினங்களுக்கும் நகர்ப்புற செலவினங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும். 2004 -2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான செலவு வேறுபாடு 90.8% ஆக இருந்தது. இது 2009-2010இல் 88.2% என குறைந்தது. 2011 -2012இல் 83.9% ஆக சரிந்தது.
தற்போதைய ஆய்வு முடிவின் படி கிராமப்புற செலவுகள் மற்றும் நகர்ப்புற செலவுகளுக்கு இடையிலான வேறுபாடு 71.2% என குறைந்துவிட்டது. கிராமப்புறங்களில் செலவானது அதிகரித்திருப்பதை 11 வருட இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்ட முக்கிய செலவு தரவு காட்டுகிறது.
20 ஆண்டுகளில் எவ்வளவு உயர்வு?: கடந்த 2004-2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்திர சராசரி செலவு என்பது 579 ரூபாய் மட்டுமே. அதுவே நகர்ப்புறங்களுக்கு 1,105 ரூபாய் என இருந்தது.
தற்போது வெளியாகி இருக்கும் 2022-2023 தரவுகளை ஒப்பீடு செய்தால் கிராமத்தில் செலவினமானது 552% அதிகரித்துள்ளது, நகர்ப்புறங்களில் 484% உயர்ந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, சில்லறை பணவீக்கம் மற்றும் வறுமை நிலை போன்ற முக்கியமான பொருளாதாரக் குறிகாட்டிகளை மதிப்பிடுவதற்கு இந்த தரவு முக்கியமானது என்கின்றனர் நிபுணர்கள்.
சிக்கிம் மாநிலத்தில் அதிக செலவு: இந்த தரவின் அடிப்படையில் பார்த்தால் நாட்டிலேயே அதிகமாக சிக்கிம் மாநிலத்தில் தான் மக்கள் அதிக செலவு செய்கின்றனர். சிக்கிம் நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பம் செய்யும் சராசரி செலவு 7,731 ரூபாய், அதுவே நகர்ப்புறங்களில் 12,105 ரூபாய் ஆகும். சத்தீஸ்கரில் குறைந்தபட்சமாக கிராமங்களில் குடும்ப செலவு 2,466 ரூபாயாகவும், நகரங்களில் 4,483 ரூபாயாகவும் இருக்கிறது.
இந்த தரவின் படி கிராமங்களில் மாதந்தோறும் ஒரு குடும்பம் உணவுக்காக செலவிடும் தொகை 1,750 ரூபாய் ஆகும். அதே போல நகரங்களில் உணவுக்காக செலவிடும் தொகை 2,530 ரூபாய் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications