செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பில் ஜாம்பவானாக இருக்கும் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்காவில் புதன்கிழமை வர்த்தகத்தில் சாதனை உயர்வை எட்டியுள்ளது. இதன் மூலம், என்விடியா நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 3 டிரில்லியன் டாலர்களைத் தாண்டி, ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 5.16 சதவீதம் அதிகரித்து 1224.40 டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் மட்டுமே என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 154.19 சதவீதம் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது. தற்போது என்விடியா பங்குகள் 1224.40 டாலராக இருக்கும் வேளையில் ரீடைல் முதலீட்டாளர்களின் பங்கீடு மிகவும் குறைவாக உள்ளது.
இந்த நிலையை மாற்ற என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 10:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனாலேயே என்விடியா கூடுதலாக அதிகரித்துள்ளது. இந்தப் பிரிப்பு ஜூன் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இது ரீடைல் முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
ஆப்பிளை விஞ்சிய என்விடியாவின் பங்குச் சந்தை மதிப்பு அதிகரிப்பு, சிலிக்கான் வேலியில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. 2007 இல் ஐபோனை அறிமுகப்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுவிய ஆப்பிள் நிறுவனம், இதுவரையில் அமெரிக்க டெக் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 3.14 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனமாகத் திகழ்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் இதன் பங்குகள் 1.5% உயர்ந்துள்ளன.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோசாஃப்ட், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் கூகுள் உரிமையாளர் ஆல்பபேட் ஆகிய நிறுவனங்கள் இதில் தீவிரமாக போட்டிப் போட்டு வருகிறது.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு துறை செயல்பாட்டுக்கு என்விடியா-வின் சிப்-கள் தான் மிகவும் முக்கியமானதாகவும், அடிப்படையானதாகவும் உள்ளது. இதனால் என்விடியா தற்போது டெக் துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வர துவங்கியுள்ளது.
மே 22ஆம் தேதி என்விடியா நிறுவனம் தனது வருவாய் கணிப்பை வெளியிட்டதிலிருந்து, ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 30% உயர்ந்துள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தில் என்விடியா பங்குகள் இறுதியாக 5.16% உயர்ந்து 1,224.40 டாலராக உயர்ந்து அதன் சந்தை மதிப்பு 3.014 டிரில்லியன் டாலராக இருந்தது. இதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 0.78% உயர்ந்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.00 டில்லியன் டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications