அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏஐ சிப்களை தயாரிக்கும் நிறுவனம் தான் என்விடியா (Nvidia). உலகின் முன்னணி ஸ்மார்ட் கருவிகள் மற்றும் ஏஐ கருவிகளுக்கு எல்லாம் இந்நிறுவனம் தான் நவீன சிப்களை தயாரித்து வழங்குகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் மதிப்பு மிக்க நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது.
என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்ததோடு அமெரிக்க டெக் உலகின் அசைக்க முடியாத நபராக மாறியுள்ளார். இந்நிலையில் மீது சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது உண்மை என அவரே ஒப்பு கொண்டுள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை சிங்கப்பூரை அடிப்படையாக கொண்டு செயல்படும் மெகாஸ்பீடு (Megaspeed) என்ற டேட்டா சென்டர் நிறுவனத்துடன் தொடர்புடைய அலிஸ் ஹுவாங் என்பவருக்கு என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் உடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். இந்த அலிஸ் ஹுவாங் சீன பாதுகாப்பு அமைச்சகத்திற்காக உளவு பார்ப்பவர் என்பதையும் கண்டறிந்தனர்.
இவர் அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்ப ரகசியங்களையும், நவீன ஏஐ சிப்களையும் சீனாவுக்கு கொண்டு செல்ல ஜென்சென் ஹுவாங்குடன் நெருக்கமாக பழகி இருக்கலாம் என அமெரிக்க உளவு துறை சந்தேகம் எழுப்பியுள்ளது. இது குறித்து டிரம்புக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான 63 வயதாகும் ஜென்சன் ஹுவாங், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில் சீன பெண் உடனான தனது உறவை ஒப்புக்கொண்டார். நான் எனது மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டேன். எனது செயலால் எனது மனைவியும் குழந்தைகளும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். நான் செய்த தவறுக்கு எந்த ஒரு நியாயமும் கூற முடியாது. நான் எனது குடும்பத்தினரிடமும், நிறுவன ஊழியர்களிடமும் ஆழமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை தொடர்பான கவலைகளை எழுப்புவதால் என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழு அதிகாரப்பூர்வமாக விசாரணை தொடங்கியுள்ளது. ஜென்சன் ஹுவாங் இந்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை தேசிய பாதுகாப்போ அல்லது என்விடியா நிறுவனத்தின் ரகசியங்களோ சமரசம் செய்யப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றாலும், கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் கொண்டு இந்த விசாரணை நேர்மையாக நடத்தப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோவிடம் கேட்டபோது, இது ஒரு நிறுவனத்துக்கு உட்பட்ட விவகாரம் என்பதால் கருத்து தெரிவிக்க முடியாது என மறுத்துவிட்டார். அதே வேளையில் சீனா தரப்பில், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை மற்றும் அவதூறானவை என கூறியுள்ளது.
என்விடியா நிறுவனம் உலகளாவிய ஏஐ சிப் சந்தையில் மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், இந்த விவகாரம் நிறுவனத்தின் பங்குகள் மீதும், அமெரிக்கா-சீனா தொழில்நுட்ப போட்டி மற்றும் சிப் ஏற்றுமதி விவகாரங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications

