சென்னை: இந்தியாவின் முன்னணி அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான நைக்கா தனது நான்காவது காலாண்டு முடிவுகளை தெரிவித்துள்ளது. நைக்கா (Nykaa) நிறுவனத்தை இயக்கும் FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், மார்ச் 31, 2024இல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 9 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின், இதே காலாண்டில் ரூ. 2 கோடியாக இருந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் லாபம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
ஃபால்குனி நாயர் தலைமையிலான நைக்கா நிறுவனம் ரூ.1,668 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1,302 கோடியாக இருந்தது. இது சுமார் 28 சதவீதம் அதிகரிப்பாகும். 2023-2024ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் நைக்கா நிறுவனம் ரூ. 1,789 கோடி வருவாய் மற்றும் ரூ.17 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ஏப்ரல் புதுப்பிப்பில், நிறுவனம் தனது BPC பிரிவு தொழில்துறையை விட வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறியுள்ளது. நைக்கா நிறுவனத்தின் கிராஸ் மெர்கண்டைல் வேல்யூ (GMV) அதாவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மொத்தமாக இ-காமர்ஸ் பிளாட்பார்மில் இருந்து விற்கப்பட்ட பொருள்களின் மதிப்பு 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தற்போது ரூ. 3217.20 கோடியாக உள்ளது.
நைக்கா நிறுவனத்தின் செயல்திறன்: 2024ஆம் நிதியாண்டின் Q4 காலாண்டில், நைக்கா நிறுவனம் US $1 பில்லியன் (ரூ 8340.90 கோடி) GMV என்ற மைல்கல்லை அடைந்தது. இது 2023ஆம் நிதியாண்டின் Q4 காலண்டோடு ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகமாகும்.
2024ஆம் நிதியாண்டின் Q4 காலாண்டில், ஒருங்கிணைந்த BPC பிரிவின், GMV வளர்ச்சியானது, கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அழகு சாதன பொருட்களான ஸ்கின் கேர் தயாரிப்புகள், ஹேர் கேர் தயாரிப்புகள், பாடி கேர் தயாரிப்புகள் போன்றவற்றின் விற்பனை அதிகரித்ததால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 31, 2024 நிலவரப்படி 68 நகரங்களில் 187 நைக்கா ஸ்டோர்கள் உள்ளன. அதில் 42 கடைகள் இந்த ஆண்டில் திறக்கப்பட்டன.
நைக்கா நிறுவனத்தின் ஃபேஷன் பிரிவின் விற்பனை (GMV) 2023 ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 2024 ஆம் நிதியாண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக பெண்களின் இந்திய உடைகள், மேற்கத்திய உடைகள் மற்றும் உள்ளாடைகள் போன்ற விற்பனையில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications