இந்தியாவின் முன்னணி அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான நைக்கா தனது Q1 காலாண்டு முடிவுகளை தெரிவித்துள்ளது. நைகா (Nykaa) பிராண்டை இயக்கும் FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், ஜூன் 30, 2024-இல் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ. 13.64 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நைகா நிறுவனம் ஈட்டிய ரூ. 5.42 கோடியுடன் ஒப்பிடும்போது இது 152 % அதிகரிப்பாகும்.
இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,746.11 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,421.82 கோடியாக இருந்தது. இந்த அதிகரிப்பு கடந்த ஆண்டை விட சுமார் 23 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய காலாண்டான ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் ஈட்டிய ரூ.9.07 கோடி லாபத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் 50% அதிகரித்துள்ளது. நைகா நிறுவனத்தின் ஆபரேஷன்ஸ் மூலம் வருவாய் ரூ.1,668 கோடியில் இருந்து 4.6% அதிகரித்துள்ளது.
நைகா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, டாட் & கீ வெல்னெஸ் பிரைவேட் லிமிடெட்டில் உள்ள 39% பங்குகளை, வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த காலாண்டு முடிவுகளின் அறிக்கை, சந்தை மூடிய பின்னர் வெளியிடப்பட்டது. இந்த காரணத்தால் நைகா நிறுவனத்தின் பங்கு விலை இன்று NSE பங்குச்சந்தையில் 3% குறைந்து ரூ.188 ரூபாயில் முடிவடைந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் செலவு ரூ. 1,418.83 கோடியாக இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் 22% அதிகரித்து, ரூ. 1 731.36 கோடி செலவாகப் பதிவாகியுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் மொத்த GMV மதிப்பு ரூ.3,321 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 25% அதிகரிப்பாகும். வட்டி, வரிகள், தேய்மானம் உட்பட நிறுவனத்தின் EBITDA ரூ.96 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 31% வளர்ச்சியாகும்.
நைகா நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்கள் பிரிவின் வருவாய் 28% அதிகரித்து ரூ.2,543 கோடியாக உள்ளது. ஃபேஷன் பிரிவின் வருவாய் 15% உயர்ந்து ரூ.7.74 கோடியாக உள்ளது.
FSN E-காமர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 3.5 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 33% அதிகமாகும். மேலும், கடந்த 1 வருடத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை இந்நிறுவனம் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த பிராண்டுகளின் எண்ணிக்கை 6,700-ஐ தாண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications