தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்ற நிலக்கரி-யில் ஊழல் செய்த அதானி குழுமம்.. OCCRP குற்றச்சாட்டு..!!

ஆதானி குழுமம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு (Tangedco) விற்பனை செய்யப்பட்ட நிலக்கரி-யில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக அமெரிக்க பில்லியனர் ஜார்ஜ் சோரஸ் முதலீட்டில் இயங்கும் 'ஆர்கனைஸ்டு கிரைம் அண்ட் கரப்ஷன் ரிப்போர்ட்டிங் ப்ராஜெக்ட்' (OCCRP) அமைப்பு பல்வேறு ஆவணங்களை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட குறைந்தது 24 நிலக்கரி கப்பல்கள், ஆரம்பத்தில் குறைந்த தர நிலக்கரி என விலை நிர்ணயிக்கப்பட்டு, இறுதியில் இவை மூன்று மடங்கு அதிக விலையில், Tangedco-விற்கு விற்பனை செய்யப்பட்டதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்ற நிலக்கரி-யில் ஊழல் செய்த அதானி குழுமம்.. OCCRP குற்றச்சாட்டு..!!

2014 ஜனவரி 9 ஆம் தேதி, இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட "எம்.வி கல்லியோபி எல்" என்ற கப்பல், இரண்டு வாரப் பயணத்திற்குப் பிறகு, எண்ணூர் துறைமுகத்தில் நின்றது. இது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக 69,925 டன் நிலக்கரி ஏற்றி வந்தது என்று ஓ.சி.சி.ஆர்.பி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த நிலக்கரிக்கான ஆவணங்கள் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் வழியாகச் சுற்றி வளைத்து வந்ததாக அறிக்கை கூறுகிறது. இந்த பயணத்தின் போது, நிலக்கரி விலை ஒரு டன் $91.91 என்ற மூன்று மடங்கு விலைக்கு அதிகரித்தது. மேலும், நிலக்கரி தரமும் குறைந்த தர நிலக்கரி என்பதிலிருந்து, மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் விரும்பும் தூய்மையான, உயர் தர நிலக்கரி என்ற உயர்தர வகையில் மாற்றப்பட்டது.

இந்த நிலக்கரி Tangedco அடைவதற்கு முன்னர், இந்த கப்பலுக்கான ஆவணங்கள் ஒரு இடைத்தரகர் நிறுவனமான "சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டர்ஸ் லிமிடெட்" வழியாகத் திருப்பிவிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் வரி தளர்வுகள் அதிகம் கொண்ட பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்டது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த நிலையில் சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டர்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட அதே கப்பலுக்காக ஆதானி குழுமத்தின் துணை நிறுவனமான ஆதானி குளோபல் பீ.டி.ஈ சிங்கப்பூர் நிறுவனத்திற்கு ஒரு புதிய இன்வாய்ஸ் அதாவது, பில் வழங்கியது. இதில் நிலக்கரி டன்னுக்கு $33.75 என்ற விலையும், இதன் தரம் கிலோகிராமுக்கு 3,500 கிலோகலோரி (கிகி/கி.கி) க்கும் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறைந்த தர நிலக்கரி என்பதைக் குறிக்கிறது.

ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆதானி குளோபல் பீ.டி.ஈ சிங்கப்பூர் நிறுவனம் Tangedco-விற்கு இந்த கப்பலுக்கான பில்களை வழங்கியபோது, அனைத்து தகவல்களும் மாறிவிட்டன. ஒரு டன் நிலக்கரி $91.91 என்று கடுமையாக விலையை உயர்த்தியது மற்றும் நிலக்கரி 6,000 கிகி/கி.கி என்ற உயர்ந்த தரம் கொண்டது என்று பட்டியலிட்டு விற்பனை செய்துள்ளது.

இந்த குற்றச்சாட்டைப் பல ஆதாரங்கள் மூலம் ஓ.சி.சி.ஆர்.பி நிரூபித்துள்ளது. பல்வேறு நாடுகளின் விலைப்பட்டியல்கள் மற்றும் வங்கி ஆவணங்கள், இந்திய வருவாய் புலனாய்வு (DRI) நடத்திய விசாரணைக் குறிப்புகள், ஆதானி குழுமத்திற்கு நிலக்கரி வழங்கிய இந்தோனேசியா நிறுவனத்தின் கசிந்த ஆவணங்கள், Tangedco-விடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் என பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்து இந்த அறிக்கையை OCCRP தயாரித்துள்ளது.

OCCRP அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வருவாய் புலனாய்வு (DRI) அமைப்பு ஒரு தசாப்தத்திற்கு முன்பு விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், ஆதானி குழுமம் மற்றும் பிற நிறுவனங்கள் வெளிநாட்டு இடைத்தரகர்களைப் பயன்படுத்தி மின்சார வாரியங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் விலையை உயர்த்தினவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆனால், இந்த விசாரணைக்குத் தடை விதிக்கும் வகையில் ஆதானி குழுமம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. இந்த வழக்கில் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கான விலைப்பட்டியல்கள் போன்ற தகவல்களை இந்திய வருவாய் புலனாய்வு (DRI) பெறத் தடை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய வருவாய் புலனாய்வு (DRI) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால் OCCRP அமைப்பு இந்த ஆவணங்களைக் கைப்பற்றி தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மேலும் அறப்போர் இயக்கம் தங்களது நீண்டகால கோரிக்கையை இந்த ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை ஆதானி குழுமம் அதிக விலையில் Tangedco-விற்கு விற்பனை செய்த ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசன் கூறுகையில், 2012 ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலத்தில், Tangedco அமைப்பு அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட், நாலெட்ஜ் இன்டர்நேஷனல் ஸ்ட்ரேடஜி சிஸ்டம்ஸ், செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ், எம்எம்டிசி ஆகியவற்றில் இருந்து மொத்தம் 2.44 கோடி டன்கள் நிலக்கரியை மின் உற்பத்தி நிலையங்களுக்காக இறக்குமதி செய்துள்ளது. இதில் 49 சதவீத நிலக்கரி அதானி குழுமத்திடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசன் மேலும் கூறுகையில், நிலக்கரி வாங்குவதற்கான டெண்டர் விதிமுறைகளின்படி, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் கிலோகிராமுக்கு 6,000 கிலோகலோரி (kcal/kg) இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் வழங்கப்பட்ட நிலக்கரி வெறும் 4,500 கிலோகலோரி (kcal/kg) தரமே கொண்டிருந்ததாகவும், இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஜெயராமன் வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி தான் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கையில் இருப்பதாகவும், ஆனால் இதுவரை இந்த விவகாரத்தில் FIR கூட பதியப்படவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி கொள்முதல் ஊழல் தொடர்பாக DVAC-ல் புகார் அளிக்கப்பட்டபோது, FIR பதிவு செய்யப்பட்டு, மின்சார வாரியத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மீது சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tangedco இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியுள்ளது, ஆனால் அதன் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய மின்சார துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி, வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனதாகத் தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு.

இதற்கு பதிலளித்த டேங்கோ அதிகாரிகள், பொதுவாக, தரம் குறைந்த நிலக்கரி (low calorific value) அதிக தரம் கொண்ட நிலக்கரி (high calorific value) என வழங்கப்படுவதால், நிலக்கரி "காணாமல் போனது" போன்ற தோற்றம் ஏற்படுகிறது என்று விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிலக்கரி ஏற்றப்படும் மற்றும் இறக்குமிடம் ஆகிய இடங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்வு கழகம் (டேங்கட்கோ) அதிகாரிகள் ஆகியோரால் தரம் சோதிக்கப்பட்டது.

"பல்வேறு அமைப்புகளால் பல்வேறு இடங்களில் இத்தனை விரிவான தரம் சோதனை செயல்முறையைக் கடந்து வந்த நிலக்கரி குறித்து, தரம் குறைந்த நிலக்கரி வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது நியாயமற்றது மட்டுமல்ல, முற்றிலும் தவறானது" என்று அவர் கூறினார்.

"மேலும், வழங்கப்பட்ட நிலக்கரிக்கு, செலுத்தப்படும் கட்டணம், சோதனை செயல்முறை மூலம் தீர்மானிக்கப்படும் தரத்தை அடிப்படையாகக் கொண்டது" என்று செய்தித் தொடர்பாளர் மேலும் விவரித்தார்.

மேலும் இந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள கப்பலை அதானி குழுமம் பிப்ரவரி 2014 முன்பு பயன்படுத்தியது இல்லை. அதீத விலைக்கு விற்கப்பட்ட நிலக்கரி குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக DRI அமைப்பின் 40 நிறுவனங்களை விசாரணை செய்தது. இதில் அதானி நிறுவனங்கள் டிஆர்ஐ கேட்ட விவரங்களை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அளித்துவிட்டன. அதன்பிறகு, கூடுதல் ஆவணங்களை டிஆர்ஐ கேட்கவில்லை. டிஆர்ஐ எந்த குறைபாடு அல்லது ஆட்சேபனையையும் இந்த ஆவணங்களில் தெரிவிக்கவில்லை எனவும் அதானி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+