இந்திய ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை அதிகரித்து வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலைகள், பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகள், பெட்ரோல் டீசல் விலைகள் ஆகியவை குடிமக்களின் பாக்கெட்டுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. இதனால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏதேனும் குறைவு ஏற்படுகிறதா? என்பதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) போன்ற அரசு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.15 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.12 லாபம் ஈட்டி வருகின்றன. ICRA-இன் சமீபத்திய அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் விலை சரிவினால் இந்தக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சில்லரை விற்பனை விலை (RSP) மார்ச் 2024 முதல் மாற்றப்படவில்லை,மார்ச் 15, 2024 அன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டது. இந்தியாவில் எரிபொருள் விலை 2 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது, பெட்ரோல் இன்னும் பல மாநிலங்களில் லிட்டருக்கு ரூ. 100க்-கும் மேல் உள்ளது, மேலும் டீசல் லிட்டருக்கு ரூ. 90-க்கும் மேல் உள்ளது.
2023 முதல் 2024-ஆம் நிதியாண்டிற்கான செயல் திறன் OMC நிறுவனங்களை பொறுத்தவகையில் சிறப்பானதாக உள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், அரசுக்குச் சொந்தமான OMC-களின் மொத்த லாபம் ரூ. 86,000 கோடி என்று சமீபத்தில் உறுதி செய்தது. இந்த லாபம் முந்தைய ஆண்டை விட 25 மடங்கு அதிகமாகும்.
2022 முதல் 2023-ஆம் நிதியாண்டில் அதன் ரூ.6,980 கோடி இழப்புக்கு முற்றிலும் மாறாக, HPCL ரூ.16,014 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. BPCL இன் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.26,673 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 13 மடங்கு அதிகமாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தாலும், இந்திய நுகர்வோர் எரிபொருள் விலையில் எந்தக் குறைவையும் இதுவரை காணவில்லை. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, OMC-கள் விலைகளைக் குறைக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கச்சா எண்ணெயின் விலை எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் லாபத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக இந்தியாவின் எரிபொருள் சில்லறை சந்தையில் 90% OMC-கள் கொண்டுள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இந்த நிறுவனங்கள் தங்கள் மார்க்கெட்டிங் தங்கள் லாபத்தை அதிகரிக்க முடிந்தது. இனிவரும் நாட்களில் OMC நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications