உலக பொருளாதாரம் ஒரு மிகப்பெரிய எரிசக்தி போரின் விளிம்பில் நிற்கிறது. சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாத்தி பிரோல் விடுத்துள்ள இந்த ஒற்றை எச்சரிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உறைய வைத்திருக்கிறது. 1973 மற்றும் 1979-களில் உலகம் சந்தித்த ஆயில் ஷாக் (Oil Shock) பற்றி பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் இப்போது ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள முடக்கம், அந்த இரண்டு நெருக்கடிகளையும் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவு பாதிப்பு இருக்குமோ, அதைவிட பல மடங்கு மோசமானது என IEA எச்சரித்துள்ளது.
IEA தலைவரான ஃபார்தி பிரோல், மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை தூண்டி உள்ளதாகவும், அதன் பாதிப்புகளிலிருந்து எந்த ஒரு நாடும் தப்பிக்க முடியாது என்று எச்சரித்துள்ளார்.

அதுவும் தற்போதைய சூழலை 1970-களின் எண்ணெய் அதிர்ச்சிகளுடனும், 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரின் விளைவுகள் உடனும் பிரோல் ஒப்பிட்டுள்ளார். இப்போதைய நிலைமை என்பது இரண்டு எண்ணெய் நெருக்கடிகளும், ஒரு எரிவாயு வீழ்ச்சியும் ஒன்றாக சேர்ந்தது போன்றது என்று அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக கூறியுள்ளார்.
உலக பொருளாதாரம் இன்று ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இந்த சிக்கல் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த நெருக்கடி இதே திசையில் தொடர்ந்தால், உலகின் எந்தவொரு நாடும் அதன் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார். ஆக உலக நாடுகள் இணைந்து இப்பிரச்சனையை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த போர் பதற்றத்துக்கு மத்தியில் ஒன்பது நாடுகளில், குறைந்தது 40 எரிசக்தி உள்கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்து உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டதே இந்த நெருக்கடி தீவிரமடைய காரணம். போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையேயான மோதல் முற்றியுள்ளது. இன்னும் நீட்டிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இந்த நீர்வழியை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் கோரிக்கையும், இரு தரப்பு மிரட்டல்களும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
தற்போதைய நெருக்கடியான சூழலை சமாளிக்க ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது அவசியம். ஏனெனில் ஏற்கனவே ஆசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி விட்டது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலை உயர்வை கட்டுப்படுத்த, அவசரகால இருப்பிலிருந்து கூடுதல் எண்ணெயை வெளியிட IEA தயாராக உள்ளது. இது தொடர்பாக உலக நாடுகளின் அரசாங்கங்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட விலை உயர்வை எட்டினால் மட்டுமே எண்ணெய் வெளியிடப்படும் என்ற கட்டாயம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications