உலகில் பெரும்பாலான நாடுகள் தங்களது எரிபொருள் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மூலம் பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் நம்முடைய இந்தியா சுமார் 90 சதவீத பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை வெளிநாட்டில் இருந்து, அதுவும் குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அடங்கிய OPEC+ அமைப்பு மார்ச் மாதத்தைப் போலவே ஏப்ரல் மாதத்திலும் கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அடுத்த சில நாட்களில் தொடர்ந்து விலை உயரத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OPEC+ அமைப்பு
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளின் முக்கிய அமைப்பான OPEC+, அதன் விலையைத் தனது கட்டுப்பாடுகளுடன் வைத்திருக்கும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவீடு குறித்து ஒவ்வொரு மாதமும் ஆலோசனை செய்யும் முடிவுகளை எடுக்கும்.

உற்பத்தி அளவீடு
கச்சா எண்ணெய் உற்பத்தி அளவீட்டில் ஆதிக்கம் செய்யும் காரணத்தால் இந்த அமைப்பு எடுக்கும் முடிவுகள் கச்சா எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுவாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளுக்கு இது மிகவும் முக்கிய வருவாய்த் தளமாக உள்ளது.

நிதி பிரச்சனை
இந்தச் சூழ்நிலையில் 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் கச்சா எண்ணெய் விற்பனை பெரிய அளவில் சரிந்து OPEC+ அமைப்பில் இருக்கும் நாடுகளின் நிதி நிலைமை மிகவும் மோசமானது. இதைச் சரி செய்யும் விதமாக உற்பத்தி அளவை குறைத்து விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
கடந்த சில வாரங்களாகவே OPEC+ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து வரும் காரணத்தால் சர்வதேசச் சந்தையில் இதன் விலை அதிகரித்துள்ளது, இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஏப்ரல் மாத உற்பத்தி அளவீடுகள் குறித்து OPEC+ அமைப்பு இன்று ஆலோசனை செய்துள்ளது.

வேண்டாம்.. வேண்டாம்..
வியாழக்கிழமை நடந்த OPEC கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 1.5 பில்லியன் பேரல் வரை உயர்த்துவது குறித்து ஆலோசனை துவங்கிய போது, இவ்வமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் உற்பத்தியை உயர்த்த வேண்டாம், தற்போது இருக்கும் அளவீட்டைத் தொடருவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் முடிவு
இதேவேளையில் உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடாக இருக்கும் சவுதி அரேபியா தானாக முன்வந்து ஒரு நாளுக்கு 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் அளவில் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக அறிவித்தது.

கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு
இதன் எதிரொலியாக இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் OPEC அமைப்பில் இருக்கும் நாடுகளின் கச்சா எண்ணெய் விலை 66.50 டாலரைத் தாண்டியுள்ளது. இதேவேளையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 68 டாலரைத் தாண்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
இந்நிலையில் இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச விலையைக் கண்காணிப்பதற்காகக் கடந்த சில நாட்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட உயர்வின் மூலம் திங்கட்கிழமை முதல் எரிபொருள் விலை உயர வாய்ப்பு உள்ளது.