இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் அசத்தி வருவது மட்டும் அல்லாமல் வாகனங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து சாதித்து வருகிறது.
ஓலா இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இருக்கும் வேளையில் ஐபிஓ மூலம் பெரும் தொகையைத் திரட்ட தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஓலா குழுமத்தின் அஸ்திவாரமான ஓலா கேப்ஸ்-ல் முக்கியமான சம்பவம் நடந்துள்ளது.

ஓலா கேப்ஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமந்த் பக்ஷி இந்த நிறுவனத்தில் சேர்ந்த மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓலா கேப்ஸ் என்பது ஓலா நிறுவனத்தின் டாக்சி சேவைக்கானது.
ஓலா ஐபிஓ வெளியிடும் முன்பு இந்நிறுவனத்தில் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்த நிலையில், இந்த நடவடிக்கையின் கீழ் தற்போது குறைந்தது 10% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த பணிநீக்கத்தின் மூலம் சுமார் 200 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்க நேரிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஓலா கேப்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமந்த் பக்ஷி ராஜினாமா பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது, இவரது ராஜினாமா-வை ஓலா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஓலா கேப்ஸ் நிறுவனர் பவிஷ் அகர்வால், இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் Ebitda அடிப்படையில், ஓலா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ANI டெக்னாலஜிஸ் லாபகரமான நிறுவனமாக மாறியுள்ளது என்று ஜனவரி மாதம் ஹேமந்த் பக்ஷி கூறியிருந்தார்.
ஹேமந்த் பக்ஷி ஓலா கேப்ஸ் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாக இருந்தார். கடந்த நிதியாண்டில் ஓலா கேப்ஸ் Ebitda அளவில் 66 கோடி ரூபாய் இழப்புடன் ஒப்பிடும்போது, 2022-2023 இல் 250 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்ததாகக் கூறினார். இந்த காலகட்டத்தில் வருவாய் 58% அதிகரித்து ரூ.2,135 கோடியாக இருந்தது என்று ஜனவரியில் அவர் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications