பிரபல வாடகை வாகன சேவை நிறுவனமான ஓலா கூகுள் மேப்ஸ்க்கு பதிலாக தங்களுடைய சொந்த தயாரிப்பான ஓலா மேப்ஸை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் ஓலா நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "இனி நாங்கள் கூகுள் மேப்ஸை பயன்படுத்த போவதில்லை , ஓலா மேப்ஸ் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது "எனக் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் கூகுள் மேப்பினை பயன்படுத்துவதற்காக ஓலா நிறுவனம் 100 கோடி ரூபாயை செலவு செய்து வந்துள்ளது. தற்போது சொந்தமாக வரைபடத்தை உருவாக்கி பயன்படுத்துவதால் தங்களுக்கு 100 கோடி ரூபாய் மிச்சமாகி இருப்பதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த மாதம் அசியூர் என்ற மைக்ரோசாப்டின் கிளவுட் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிலிருந்து ஓலா நிறுவனம் வெளியேறியது. தற்போது கூகுள் மேப்பில் இருந்தும் வெளியேறி விட்டது. தங்கள் உருவாக்கி இருக்கக்கூடிய இந்த ஓலா மேப்ஸை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என விரும்பினால் அதை தெரிவிக்கலாம் என்றும் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஓலா மேப்ஸில் பல்வேறு புதிய வசதிகள் கொண்டு வரப் போவதாகவும் அகர்வால் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஸ்ட்ரீட் வியூ , இண்டோர் இமேஜஸ் மற்றும் 3டி மேப் போன்ற கூகுள் மேப்பில் தற்போது இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் கூடிய விரைவில் ஓலா மேப்பிலும் வர இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் குரிட்ரம் கிளவுட் சர்வீஸ் ஓலா மேப்ஸ் லைவாக செயல்படுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
குரிட்ரம் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த போதே ஓலா நிறுவனம், கூடிய விரைவில் தங்களுக்கு என பிரத்தியேகமான ஒரு வரைபட சேவையை கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது ஓலா மேப்ஸ் என்பது ஓலா செயலிக்குள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கூடிய விரைவில் இதனை நாம் கூகுள் மேப்ஸ் போலவே தனிப்பட்ட செயலியாகவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தற்போது ஓலா செயலியை பயன்படுத்துவோர் அனைவருக்கும் அதில் ஓலா மேப்ஸே காட்டும். அதுமட்டுமின்றி ஓலா மின்சார வாகனங்களிலல் இனி தங்கள் ஆலைகளில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகளே பயன்படுத்தப்படும் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications