இந்தியாவில் முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை தளமான இருக்கும் ஓலா, நாம் இருக்கும் இடத்திற்கே வாடகை ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை வரவழைத்து பயன்படுத்தலாம். இதற்கு ஓலா செயலி நமது போனில் இருந்தாலே போதும்.
இப்படி வாடகை வாகன போக்குவரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்த நிறுவனம் ஓலா. தற்போது ஓலா குழுமத்தின் கீழ் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதை தொடந்து அடுத்த அதிரடியாக முதலீட்டு மக்களை கவர வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.

ஓலா கேப்ஸ் நிறுவனம் ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டு ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஓலா கேப்ஸ் நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐபிஓக்கான ஆவணங்களை சந்தை கட்டுப்பாட்டாளரான செபி -யிடம் சமர்ப்பிக்கவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக கோல்ட்மேன் சாச்ஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி போன்ற முதலீட்டு வங்கிகள் மற்றும் இந்திய நிறுவனங்களான கோடக், ஆக்சிஸ் ஆகியவற்றுடன் ஓலா கேப்ஸ் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது .
அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஐபிஓ ஆலோசகர்களையும் நியமிக்க ஓலா திட்டமிட்டுள்ளது. ஐபிஓ வெளியிட ஓலா நிறுவனம் முயற்சி செய்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு 8,300 கோடி ரூபாய் வரை ஐபிஓ மூலம் நிதி திரட்ட உள்ளதாக ஓலா கேப்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முயற்சியில் 4,000 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் வாடகை வாகனங்களுக்கான செயலிகளில் ஓலாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்தியாவில் முதன்முதலில் இந்த சேவையை கொண்டு வந்த பிரபலமாக்கியது ஓலா. அண்மையில் கூட ஓலா நிறுவனம் வெளிநாட்டுகளில் தாங்கள் வழங்கி வந்த சேவைகளை நிறுத்தியது.
இனி முற்றிலும் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதாக ஓலா நிறுவனம் விளக்கம் தந்தது. ஓலா கேப்ஸ் ஐபிஓ நடப்பாண்டில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு ஐபிஓ ஆகும். ஓலா கேப்ஸ் ஐபிஓ மூலம் பங்குகளை வாங்க கடுமையான போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஓலா நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பிலும் முன்னணி நிறுவனமாகமாறி வருகிறது. விரைவில் ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ-வும் வெளியாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் செயற்கை நுண்ணறிவு துறையிலும் கால் பதித்து குரிட்ரம் என்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications