சரியாக பணிக்கு வராத ஊழியர்களை கடுமையாக எச்சரித்து ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கடுமையான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் இதுதான் முக்கியமான விவாத பொருளாக மாறி உள்ளது.
ஊழியர்கள் பணிக்கு வரும் விகிதம் குறைந்தது தொடர்பாக அதிருப்தி அடைந்திருக்கும் ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் அனைத்து ஊழியர்களுக்கும் எச்சரிக்கை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் திங்கள்கிழமை முதல் ஊழியர்களின் வருகை மிகக் கடுமையாக கண்காணிக்கப்படும் என கூறியுள்ளார். நிறுவனம் தந்த சுதந்திரத்தை சில ஊழியர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என சாடியுள்ள பவிஷ் அகர்வால் அவர்களிடம் எல்லாம் ஹெச்ஆர்இல் இருந்து பேசுவார்கள் என எச்சரித்துள்ளார்.
வேலைக்கு வாருங்கள், நல்ல வேலையை செய்யுங்கள் ஓலாவின் சாதனையின் ஒரு பகுதியாக இருங்கள் என குறிப்பிட்டுள்ள அவர், தவிர்க்க முடியாத காரணங்களை தவிர வேறு யாருக்கும் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக பணிக்கு வராமல் தவிர்க்கும் ஊழியர்களிடம் ஹெச்ஆரிலிருந்து பேசுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலைக்கு கூட வராமல் நீங்கள் நிறுவனத்தையும் உங்களையும் ஏமாற்றி வருகிறீர்கள் என குறிப்பிட்டுள்ள பவிஷ் அகர்வால் உண்மையில் கடினமாக உழைத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் சக ஊழியர்களை நீங்கள் அவமரியாதை செய்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார். ஓலா நிறுவனத்தில் முக அடையாள சரிபார்ப்பு வருகை பதிவு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. ஒரு பயனர் இது போன்ற மின்னஞ்சல்களை அனுப்பினால் உங்கள் நிறுவனத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் கூட வெளியேறி விடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
ஒரு நபர் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களின் வருகை பதிவேட்டை கூடவா கண்காணித்துக் கொண்டிருப்பார் என கேள்வி எழுப்பி உள்ளார். நீங்கள் உங்களின் மேலாளர்களை நம்பவில்லையா ஒவ்வொரு ஊழியரின் வருகையை நீங்களே கண்காணிக்கிறீர்களா என கேட்டுள்ளார்.
ஒரு பயனர் பவிஷ் அகர்வால் எலான் மஸ்க்கை காப்பி அடிக்கிறார் என விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் தான் ஓலா நிறுவனம் தங்கள் ஊழியர்களில் சுமார் 500 பேரை பணி நீக்கம் செய்தது. அதே வேளையில் ஓலா எலக்ட்ரிக் கடைகளின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பவிஷ் அகர்வாலை பொறுத்தவரை சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர். அவ்வப்போது இவர் வெளியிடும் பதிவுகள் சமூகவலைதளங்களில் பெரிய விவாத பொருளாக மாறுகின்றன.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications