இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவை நிறுவனமான ஓலா சமீபத்தில் ஆட்டோமொபைல் துறையில் இறங்கி மிகப்பெரிய வர்த்தகப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்யும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களை மொத்தமாக ஓரம்கட்டிவிட்டுத் தற்போது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஓலா தனது டாக்ஸி மற்றும் எலக்ட்ரிக் பைக் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல, ஓலா நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட ஐபிஓ வெளியிடும் முயற்சியில் ஓலா நிர்வாகம் உள்ளது.
இந்த நேரத்தில் ஓலா நிறுவனத்தின் இரு உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
ஓலா நிறுவனம்
ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌரவ் போர்வால் மற்றும் தலைமை நிதியியல் அதிகாரியான சுவயம் சௌரப் ஆகியோர் இந்நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறுவதாகக் கடந்த வாரம் அறிவித்துள்ளனர்.
பாவிஷ் அகர்வால்
இதுகுறித்து இன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஓலா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவிஷ் அகர்வால் அனுப்பிய மின்னஞ்சலில், கௌரவ் போர்வால் மற்றும் சுவயம் சௌரப் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்று உள்ளதாகவும், இது நிர்வாகத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதி எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
பணிநீக்கம்
இதன் மூலம் கௌரவ் போர்வால் மற்றும் சுவயம் சௌரப் ஆகியோர் தானாக வெளியேறவில்லை என்றும், ஓலா நிர்வாகம் தான் அவர்களைப் பணியில் இருந்து நீக்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது.
அடுத்தக்கட்ட வளர்ச்சி
மேலும் பாவிஷ் அகர்வால் ஓலா நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிர்வாகத்தில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த மாற்றத்தின் மூலம் அடுத்து வரும் வாய்ப்புகளை எளிதாகப் பெற முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
கௌரவ் போர்வால்
கௌரவ் போர்வால் ஓலா நிறுவனத்தில் கடந்த 2019ல் பணியில் சேர்ந்து ஓலா டெலிவரி, ஓலா புட்ஸ் ஆகிய பரிவுகளில் முக்கியப் பதவிகளில் இருந்தார். இதைத் தொடர்ந்து மொபிலிட்டி அதாவது எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்தில் கடந்த ஒரு வருடமாகப் பணியாற்றி வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தலைமை செயல் அதிகாரியாகப் பதவியேற்றார்.
சுவயம் சௌரப்
நிதியியல் துறையில் சுமார் 20 வருடம் பணியாற்றி வந்த சுவயம் சௌரப் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் தலைமை நிதியியல் அதிகாரியாகப் பணியேற்றார். தற்போது இவர் பதவி விலகிய நிலையில் ஓலா குரூப் தலைமை நிதியியல் அதிகாரியான அருண் குமார் இனி அனைத்து நிதியியல் பணிகளையும் செய்ய உள்ளார்.


Click it and Unblock the Notifications