இந்தியாவில் ஓலா, ஊபர் , ரேபிடோ உள்ளிட்ட வாடகை வாகன செயலிகளை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகளில் முறையாக கட்டணங்கள் காட்டப்படுவதில்லை, புக் செய்யும் போது ஒரு கட்டணம், டிரிப் முடியும் போது ஒரு கட்டணம் என வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
ஓலா,ஊபர் உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கான செயலிகள் பயனாளர்களின் செல்போன் இயங்கு தளத்தை பொறுத்து ஒவ்வொரு விலையை காட்டுவதாக கடந்த சில நாட்களாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது. பயனாளர்களின் ஸ்மார்ட் போன் மாடல்கள் அடிப்படையில் அதாவது ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு கட்டணமும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தும் நபர்களுக்கு ஒரு கட்டணமும் காட்டுவதாக புகார் எழுந்தது.

சமூகவலைதளங்களில் இது தொடர்பாக பலரும் தங்களுடைய புகாரை புகைப்பட ஆதாரத்துடன் பதிவு செய்தனர். அதாவது ஒரே இடத்தில் இருந்து ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு போனில் ரைடு புக் செய்யும் போது வெவ்வேறு கட்டணங்கள் காட்டுவடு தெரிய வந்துள்ளது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஓலா மற்றும் ஊபர் ஆகிய செயலிகளில் புக் செய்தால் ஐபோனில் அதிக விலையும் ஆண்ட்ராய்டு போனில் குறைவான கட்டணமும் வசூல் செய்யப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஐபோன் வைத்திருப்பவர்கள் வசதியானவர்களாக இருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் கட்டணத்தை உயர்த்துவதாக பயனாளர்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார்கள் அனுப்பப்பட்டிருந்தன. இதனை அடுத்து ஓலா உபர் ஆகிய நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தகவலை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் பிரகலா ஜோஷியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் நுகர்வோரை சுரண்டும் நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அரசு சகித்துக் கொள்ளாது நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான சிசிபிஏ ஸ்மார்ட் போன் வகையை பொருத்து விலையை எப்படி வேறுபடுத்த முடியும் என கேள்வி எழுப்பி இருந்தது.
இதனிடையே ஓலா நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. இது தொடர்பான எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பயனாளர்களின் செல்போன் இயங்கு தள அடிப்படையில் வாடகை வாகனங்களுக்கான கட்டணங்களை நாங்கள் நிர்ணயம் செய்வதில்லை என கூறியுள்ளது.
பொதுவாக தங்களுடைய செயலிகள் குறிப்பிட்ட அந்த இடத்தில் வாடகை வாகனங்களுக்கான டிமாண்ட் எப்படி இருக்கிறது, பீக் அவர், குறிப்பிட்ட வழித்தடத்தில் டிமாண்ட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் விலையை நிர்ணயம் செய்கின்றன என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications