தமிழ்நாட்டில் இருந்து இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து விற்கும் Ola Electric, இந்திய அரசாங்கத்தால் ஏலம் விடப்படும் லித்தியம் கனிம பகுதிகளுக்கான சுரங்க உரிமைகளைப் பெறத் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இப்படியிருக்கும் வேளையில் இந்த நிலையை மாற்றவும், ஓலா தனது எலக்ட்ரிக் கார் கனவை அடையவும் பேட்டரி தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது.

கிருஷ்ணகிரியில் இருக்கும் ஓலா ஸ்கூட்டர் தொழிற்சாலைக்கு அருகிலேயே ஓலாவின் புதிய பேட்டரி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. தற்போது இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் EV பேட்டரி உற்பத்திக்குத் தேவையான ஆதாரத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியாகத் தற்போது லித்தியம் கனிம பகுதிகளுக்கான சுரங்க உரிமைகளைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சுரங்கம் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் தகவல் படி இந்தியாவில் சமீபத்தில் ராஜஸ்தானின் தேகானா (Degana) என்னும் பகுதியிலும், ஜம்மு & காஷ்மீரில் லித்தியம் கணிம இருப்புக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு & காஷ்மீர் பகுதியில் இருக்கும் ரியாசி மாவட்டத்தில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்புக் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு கூறியது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான லித்தியம் போன்ற கனிமங்களின் விநியோகத்தைப் மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு இறுதியில் அதன் முக்கியமான கனிம ஏலத்தின் முதல் பகுதியைத் தொடங்கியது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதன் எரிசக்தி தேவைகளும் அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையைக் கிரீன் எனர்ஜி வாயிலாகவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்குடன் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா பல வருடங்களாக முயற்சித்து வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 39 லட்சம் கார்களில் வெறும் 2 சதவீதம் தான் எலக்ட்ரிக் கார், 2030க்குள் இந்த அளவீட்டை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு. ஆனால் எலக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் இதன் விற்பனை குறைவாக உள்ளது.


Click it and Unblock the Notifications