நம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அமோகமாக இருப்பது மட்டும் அல்லாமல் இப்பிரிவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
2017ல் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு பவிஷ் அகர்வால் இந்நிறுவனத்தை தொடங்கினார். நாட்டின் மொத்த இரு சக்கர எலக்ட்ரிக் வாகன சந்தையில் இந்நிறுவனம் 30 சதவீத பங்கினை கொண்டுள்ளது ஓலா.

கடந்த நவம்பர் மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 29,808 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, அதாவது கிட்டதட்ட ஒரு நாளுக்கு 1000 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது முந்தைய அக்டோபர் மாதத்தை காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும்.
ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் களம் இறங்க உள்ளதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. மேலும் முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தின் ஐபிஓவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஐபிஓவுக்கான வரைவு ஆவணங்களை இந்த மாதம் ஓலா எலக்ட்ரிக் தாக்கல் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிறுவனம் ஐபிஓ வாயிலாக சுமார் ரூ.8,500 கோடி திரட்டும் என சந்தை கண்ப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஐபிஓ, புதிய பங்குகள் மற்றும் ஆஃபர் பார் சேல் கலந்த கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ இந்த மாதம் நடக்க வாய்ப்பு இல்லை அனேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் எந்தொரு வாகன தயாரிப்பாளரும் ஐபிஓ வெளியிடாத நிலையில் ஓலா-வின் ஐபிஓ அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ வெற்றிகரமானதாக அமைந்தது போல் ஓலா-வின் ஐபிஓ இருக்கும்.
இதற்கு முன்பு 2003ல் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் ஐபிஓ சந்தையில் களம் இறங்கியது. மேலும் ஓலாவின் ஐபிஓ அளவு அடிப்படையில் இந்தியாவின் டாப் 15 ஐபிஓக்களில் ஒன்றாக இருக்கும் என்று தொழில்துறை தரவுகள் காட்டுகின்றன.
மேலும் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் முதல் முழுமையான எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் எல்லாமே அனைத்து விதமான எரிபொருளில் இயங்கும் வாகனத்தை தயாரிக்கின்றன.
இந்த ஆண்டு அக்டோபரில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பங்கு மற்றும் கடன் ஆகியவற்றின் மூலம் ரூ.3,200 கோடி திரட்டியது. இந்த நிதியில் பெரும்பகுதி அதன் தமிழ்நாட்டில் உள்ள ஜிகாபாக்டரியில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி பிரிவு மற்றும் ஒரு பேட்டரி பிரிவை வேகமாக நிறுவ பயன்படுத்தப்படுகிறது.
இந்த பிரிவுகள் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜிகாபாக்டரி என்பது சுற்றுப்புறத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை குறைக்கும் நோக்கில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் ஒரு பெரிய உற்பத்தி ஆலையாகும்.


Click it and Unblock the Notifications