இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமாக இருக்கும் ஓலா எலக்ட்ரிக் தனது ஐபிஓ வெளியீட்டில் ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்படவில்லை என்றாலும், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து முதலீட்டாளர்களின் அதிகப்படியான வரவேற்பு பெற்ற காரணத்தால் 76 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட பங்குகள் சில நாட்களில் 157 ரூபாய் வரையில் உயர்ந்தது.
ஆனால் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்திலேயே ஓலா முதலீட்டில் இருந்து முதலீட்டாளர்கள் லாபம் பெற முடிவு செய்த காரணத்தால் அதன் உச்ச விலையில் இருந்து இன்று வரையில் சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற ஓலா 2 முக்கியமான திட்டத்தை அறிவித்தது.

முதல் திட்டம் ஓலா விரைவில் ஸ்கூட்டர் தயாரிப்பை தொடர்ந்து எலக்ட்ரிக் பைக் தயாரித்து விரைவில் வெளியிடும் என அறிவித்து, இதன் மாடல்களையும், விலையும் அறிவித்தது. ஆனால் இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிதும் கவரவில்லை என்பதால் பலன் அளிக்காமல் போனது. இப்படியிருக்கையில் தற்போது அடுத்த முக்கியமான திட்டத்தை ஓலா தீட்டிவருவதாகத் தகவல் வெளியாகியது.
ஓலா எலக்ட்ரிக் இந்த ஆண்டு தனது புதிய எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை பஜாஜ் ஆட்டோவின் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை விட குறைவாக இருக்கும் என்று தகவல் வெளியானது.
இந்தியாவில் தற்போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் 3 சக்கர வாகனங்களில் கவனம் செலுத்தி வரும் வேளையில் பாவிஷ் அகர்வாலின் ஓலா நிறுவனமும் மூன்று சக்கர வாகனங்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இது பஜாஜ் எலக்ட்ரிக் ஆட்டோ விலையைக் காட்டிலும் குறைவான தொகைக்கு அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 3 சக்கர வாகனம் இத்துறையில் இதுவரையில் இல்லாத வகையில் பல புதிய சேவைகளையும், வசதிகளையும் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. 3 சக்கர வாகன பிரிவில் பயணிகள் வாகனங்களைக் காட்டிலும் சரக்கு வாகனங்களுக்குப் பெரிய டிமாண்ட் சந்தையில் உள்ளது. இதனால் ஓலா எலக்ட்ரிக்-ன் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டம் வெற்றிபெற்றால் சரக்கு வாகனங்களும் அடுத்தடுத்து வெளியிட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஓலா இந்த மூன்று சக்கர வாகனத்திற்குத் தற்காலிகமாக "ராஹி" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ராஹி என்றால் பயணி என்று பொருள். ஓலா-வின் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் பஜாஜ் RE, மஹிந்திரா ட்ரியோ மற்றும் பியாஜியோ ஏப் இ-சிட்டி போன்ற வாகனங்களுடன் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி சிஎன்பிசி சேனலுடன் பேசிய ஓலா எலக்ட்ரிக் நிர்வாக தலைவர் மற்றும் சிஇஓ பாவிஷ் அகர்வால், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி விரைவில் மூன்று சக்கர வாகனத்தை சந்தைகளுக்கு கொண்டு வர விரும்புகிறது என்ற சிக்னல் மட்டும் கொடுத்தார்.
இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருக்கும் வேளையில் ஓலா பங்குகள் குறைந்த பட்சம் 1 சதவீதமாவது உயர்ந்திருக்க வேண்டும், ஆனால் மும்பை பங்குச்சந்தையில் ஓலா பங்குகள் சுமார் 4 சதவீதம் சரிந்து 110.55 ரூபாயாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 110.20 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. ஓலா-வின் 52 வார குறைவான விலை 75.99 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications