நாட்டின் வேலைச் சந்தையில் கடும் பரபரப்பு நிலவுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கத்தை அறிவிப்பது தான். ஐடி நிறுவனங்கள், வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. அதில் தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. அதாவது தனது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 12 சதவீத ஊழியர்களை இந்தப் பணி நீக்கம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
வழக்கம்போல பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்துமோ அதே விஷயங்களில் தான் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் கவனம் செலுத்தவுள்ளது. உதாரணமாக தங்களுடைய செயல்பாடுகளை நெறிப்படுத்துதல், தேவையற்ற ஊழியர்களை நீக்குதல், லாபத்தை அதிகப்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்த மறு சீரமைப்பு செயல்முறை தொடங்கப்பட்டது. மேலும் டிசம்பர் 2024-ஆம் ஆண்டுக்குள் இந்த ஒட்டு மொத்த செயல்முறையும் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டிலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதே போன்ற பணி நீக்கத்தை அறிவித்தது. ஆகஸ்ட் 2, 2024 ஆம் ஆண்டு தனது முதல் ஐபிஓவை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றில் பங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐபிஓ வெளியீட்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட 2025-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு அறிக்கையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38.5% அதிகமான ஆண்டு வருவாய் வளர்ச்சியை பதிவு செய்தது. இரண்டாவது காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,240 கோடியாக உயர்ந்தது.
இந்த ஆண்டு வாகன விற்பனை 73.6 சதவீதம் அதிகரித்துள்ளது 2025 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 98.219 வாகனங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது 2024-ஆம் நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட 56,813 வாகனங்களை விட அதிகமாகும்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சுமார் 782 சொந்த ஸ்டோர்களின் நெட்வொர்க்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிற்கும் சராசரியாக 130 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 2025-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் தனது நெட்வொர்க்கை 2000 கடைகளுக்கு மேல் விரிவுபடுத்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரூ.75,000 முதல் ரூ.1,50,000 ரூபாய் வரையிலான EV ஸ்கூட்டர் விற்பனையின் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஒரு முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இரு சக்கர வாகனம் மட்டுமின்றி, மூன்று சக்கர வாகன பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications