ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் முக்கிய அதிகாரிகள் தொடர்ச்சியாக விலகி வரும் வேளையில், புதிதாக 2 உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்பு உயர்மட்ட நிர்வாகம் நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 முக்கிய அதிகாரிகள் வெளியேறியுள்ளது அதன் முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அதிகாரி அன்ஷுல் கண்டேல்வால் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுவோனில் சட்டர்ஜி ஆகியோர் தங்களது பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் கடந்த சில காலமாக பல்வேறு நிர்வாக ரீதியான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் மாதம் சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு முன்னர், 2022 செப்டம்பரில் இரண்டு முறை நிறுவன ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு துறைகளில் செயல்பாடுகளை குறைக்கப்பட்டு செயல்திறனை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தற்போது 2 உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.
சுவோனில் சட்டர்ஜி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓலா குழுமத்தில் இணைந்து ஓலா krutrim மற்றும் ஓலா மேப்ஸ் போன்ற முக்கிய ப்ராடெக்ட்களில் பணியாற்றி அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். 2021-ம் ஆண்டில் அவர் தலைமை தொழில்நுட்ப மற்றும் ப்ராடெக்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அன்ஷுல் கண்டேல்வால் 2019-ம் ஆண்டில் ஓலா நிறுவனத்தில் இணைந்தார். ஓலா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட ஃபுட்பாண்டா நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் மற்றும் வருவாய் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் அவரிடம் இருந்தது. இதனால் ஓலா நிர்வாகம் இவரை ஓலா ஃபுட்ஸ் பிரிவின் தலைமை மார்கெட்டிங் அதிகாரியாக சேர்ந்து, படிப்படியாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அதிகாரியாக உயர்ந்தார்.
இந்த பதவி விலகல்கள் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இதற்கு முன்னர், நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அன்கித் பக்தி, நிறுவன செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி பிரமீந்திர தோமர், தலைமை மனிதவள அதிகாரி என். பாலச்சந்தர் ஆகியோரும் பதவியிலிருந்து விலகினர்.
சமீபத்தில், ஓலா நிறுவனம் தனது ரீடைல் மற்றும் சர்வீஸ் வலையமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழுவதும் உள்ள கடைகளின் எண்ணிக்கை 800-லிருந்து 4,000 ஆக அதிகரிக்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்கு பெரும் பொருட் செலவு ஏற்படும் வேளையில் இரு முக்கிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் 524 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த ஓலா இந்த ஆண்டு 495 கோடி ரூபாய் இழப்பை பதிவு செய்து பாதிப்பை குறைந்துள்ளது. விற்பனை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருள் செலவு குறைவு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 1,214 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 873 கோடி ரூபாயாக இருந்ததிலிருந்து 39% அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications