இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ஆட்டோமொபைல் சந்தைக்குள் புதிதாகக் களமிறங்கிய ஓலா நிறுவனம் ஆரம்பம் முதல் அதிரடியாக இயங்கி வருகிறது.
ஓலா அறிமுகம் செய்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றாலும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்று அசத்தி வரும் ஓலா வெளியிட உள்ள சாப்ட்வேர் அப்டேட்-களும் எலக்ட்ரிக் வாகன பிரியர்களிடம் அதிகப்படியான கவனத்தைப் பெற்றுள்ளது.
ஓலா நிறுவனம்
ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவை வழங்கி வந்த ஓலா நிறுவனம் ஆட்டோமொபைல் துறைக்கு வரும் போது குறிப்பாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களைச் சொந்தமாகத் தயாரித்து விற்பனை செய்வதாக அறிவித்த போது பலரும் நம்பவில்லை, ஆனால் இன்று ஆன்லைன் வாயிலாகவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
ஓலா - தமிழ்நாடு அரசு
இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவே தற்போது ஓலா தமிழ்நாடு அரசுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் வெளியிட்ட டிவீட்டில் உலகிலேயே மிகப்பெரிய எல்க்ட்ரிக் வாகன ஹப்-ஐ தமிழ்நாட்டில் ஓலா அமைக்க உள்ளது.
தமிழ்நாட்டில் EV HUB
இந்த EV HUB-ல் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம், எலக்ட்ரிக் கார், லித்தியம் பேட்டரி தயாரிக்கும் ஜிகாபேக்டரி ஆகியவை ஒரே இடத்தில் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் திட்டத்திற்கான ஓலா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் இன்று MOU கையெழுத்திட்டு உள்ளோம்.
முக.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் உதவி, கூட்டணி அளித்ததில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க எலக்ட்ரிக் வாகன சந்தையாக மாறும் வேகத்தை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
போச்சம்பள்ளி
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி என்னும் பகுதியில் ஏற்கனவே ஓலா மாபெரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதே இடத்தில் தற்போது இரு சக்கர வாகனம், எலக்ட்ரிக் கார், லித்தியம் பேட்டரி தயாரிக்கும் ஜிகாபேக்டரி ஆகியவை அமைக்க அடுத்த 5 வருடத்தில் 7,614 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது.
3000 பேருக்கு வேலைவாய்ப்பு
இதன் மூலம் இப்பகுதியில் மட்டும் சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு பெற உள்ளனர். ஓலா எலக்ட்ரிக் தொழிற்சாலை முழுக்க முழுக்கப் பெண்களை வைத்து ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும் நிலையில் புதிகாக அமைக்கப்படும் இரண்டு தொழிற்சாலையிலும் பெண்களைக் கொண்டும் இயங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
லித்தியம் பேட்டரி தயாரிப்பு
இந்த 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் 5,114 கோடி ரூபாய் லித்தியம் பேட்டரி தயாரிப்பதில் செலவிட உள்ளது ஓலா, இதன் மூலம் சீனாவில் இருந்து பேட்டரியை இறக்குமதி செய்வதைக் குறைக்க உள்ளது.
எலக்ட்ரிக் கார்
மேலும் மீதமுள்ள 2500 கோடி ரூபாயை வருடத்திற்கு 1.4 லட்சம் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட மாபெரும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது ஓலா.
1500 ஏக்கர் நிலம்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்திருக்கும் நிலையில் இதே பகுதியில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு 1500 ஏக்கர் நிலத்தை வாங்கும் ஓலாவின் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஜனவரி மாதம் தகவல் வெளியானது.
2024ல் முதல் எலக்ட்ரிக் கார்
ஓலா நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தனது முதல் எலக்ட்ரிக் கார்-ஐ அறிமுகம் செய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வரும் வேளையில் புதிய கார் அறிமுகத்தை ஓலா தலைமை நிதியியல் அதிகாரி ஜி.ஆர்.அருண் குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் தனது நிறுவனத்தின் முதல் கார்-ஐ 50000 டாலருக்குக் குறைவான விலையில் அறிமுகம் செய்யும் என அறிவித்தார்.


Click it and Unblock the Notifications