இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஓலா மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஒருப்பக்கம் ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் பைக்-கள் உற்பத்தியும், மறுப்புறம் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனையில் புதிய முயற்சி என பிசியாக இருக்கும் வேளையில் தற்போது தனது நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளை விரிவாக்கம் செய்ய புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.
ஓலா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில் சுமார் 786.6 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை இந்த முதலீட்டின் மூலம் ஓலா நிறுவனம் கைப்பற்ற உள்ளது.
ஓலா நிறுவனம்
ஓலா நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் ANI டெக்னாலஜிஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ஓலா 786,64,12,400 ரூபாய் அளவிலான முதலீட்டை செய்து ஓலா பைனான்சியல் சர்வீசஸ் பங்குகளை கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் ஓலா கையில் வருகிறது.
ஓலா பைனான்சியல் சர்வீசஸ்
ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இதுவரையில் சுமார் 675 மில்லியன் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் ஓலா மொபிலிட்டி பிளாட்பார்ம் தளத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சேவைகளை விரிவாக்கம் செய்யவே இந்த 786.6 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் விரிவாக்கம்
ANI டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளிட்டுள்ள அறிவிப்பில் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனது இன்சூரன்ஸ் சேவை இந்தியாவை தொடர்ந்து வெளிநாடுகளிலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
இதன் மூலம் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் விற்பனையை பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய சந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளது. மேலும் இந்த நாடுகளில் ஓலா நிறுவனத்தின் பிற சேவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடன் சேவைகள்
மேலும் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் சேவைகளை தாண்டி புதிதாக இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் வாங்குவதற்கான கடனையும், பர்சனல் லோன் சேவைகளையும் அளிக்க உள்ளது. இதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் இருந்து நிதியியல் சேவை துறைக்கும் ஓலா செல்ல முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications