ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் நஷ்டத்தை குறைப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணியில் இருந்து நீக்க இருப்பதாக குறிப்பிடுகிறது.
பவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நாடு முழுவதும் இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் அண்மைக் காலமாக இந்த நிறுவன இரு சக்கர வாகனங்கள் மீது வாடிக்கையாளர்களின் புகார் அதிகரித்துள்ளதாம். இதனால் சந்தையில் தன்னுடைய பிடியை இழந்து வருகிறது ஓலா நிறுவனம்.

இந்நிலையில் நஷ்டத்தை குறைக்கும் வகையிலும் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்திலும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களும் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர், கொள்முதல், வாடிக்கையாளர் தகவல் தொடர்பு மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு துறை என பல்வேறு துறைகளில் இயங்கும் ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக ஓலா நிறுவனம் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு தான் ஓலா நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து மிகப் பெரிய அளவில் லாபம் பார்த்தது. ஆனால் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனம் தங்களுடைய நஷ்டத்தின் அளவு 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியிட்டு இருக்கிறது. எனவே குறிப்பிட்ட சில பணிகளை மனிதர்களுக்கு பதிலாக தானியங்கு நடைமுறைக்கு மாற்ற ஓலா திட்டமிட்டுள்ளது.
தங்களுடைய வாடிக்கையாளர் தகவல் தொடர்பு சேவைகளை முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தோடு இணைப்பதால் அந்த பணிக்கு மனிதர்கள் தேவையில்லை என்பதால் அந்த துறையில் இருப்பவர்களை வேலையில் இருந்து நீக்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் விற்பனை, கிடங்குகளில் பொருட்களை பராமரிப்பது என்பன உள்ளிட்ட பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வந்து செலவினங்களை குறைப்பதற்கு ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருந்தது ஓலா நிறுவனம்தான். ஆனால் ஓலா தன்னுடைய இடத்தை படிப்படியாக இழந்து வருகிறது . பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டிசம்பர் மாதத்தில் அந்த இடத்தை பிடித்து விட்டது இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இருக்கிறது. முதலிடத்தில் இருந்த ஓலா எலக்ட்ரிக் தற்போது மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.
ஓலா நிறுவனத்தின் பங்கு மதிப்பு சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 76 ரூபாயாக இருந்தது, அதுவே தற்போது 53 ரூபாய் என குறைந்துள்ளது.
Story Written:Devika


Click it and Unblock the Notifications