சென்னை: இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இரண்டு முறை இருக்கிறது. ஒன்று புதிய வரி கணக்கு நடைமுறை, மற்றொன்று பழைய வரி கணக்கு நடைமுறை. இரண்டிலுமே அதற்கேற்ற சாதக பாதகங்கள் இருக்கின்றன.
தனிநபர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தேவைக்கு ஏற்ப பழைய மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறைகளுக்குள் மாற்றி கொள்ளலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அதற்கான விடையை தான் இதில் தெரிந்துகொள்ள போகிறோம்.

புதிய வரி நடைமுறையில் வருமான வரி உச்சவரம்பு 4 லட்சம் ரூபாய், அதே போல 12 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியம் வரை நாம் எந்த வரியும் செலுத்த வேண்டாம். புதிய வரி கணக்கு நடைமுறையில் வீட்டு கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி தொகை, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு, நிலையான வரிக்கழிவு ஆகிய வரி சலுகைகள் கிடைக்கின்றன.
பழைய வரி நடைமுறையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் தேவையில்லை. அதன் பிறகு 10 லட்சம் ரூபாயில் இருந்து வருமானம் ஈட்டுபவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும். பழைய வரி நடைமுறையில் ஒரு நிதியாண்டில் செலுத்திய காப்பீட்டு பிரீமியம், பிபிஎஃப் திட்டங்களுக்கு செய்யப்படும் பங்களிப்பு , முதலீடுகள் ஆகியவற்றை குறிப்பிட்டு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். அதேபோல மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகை, வீட்டுக் கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி தொகை , வீட்டு வாடகை கொடுப்பதனவு, விடுமுறை பயண கொடுப்பனவு ஆகியவற்றுக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
ஊதியம் பெறக்கூடிய வரி செலுத்துவோர் தங்களுக்கு எந்த அந்த வேலையில் இருந்து மட்டுமே பிரதான வருமானம் வருகிறது எனும் போது அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பழைய மற்றும் புதிய வரி நடைமுறைகளுக்குள் மாறி மாறி கணக்கு தாக்கல் செய்ய முடியும். அதாவது இந்த ஆண்டு புதிய வரிமுறையில் கணக்கு தாக்கல் செய்தவர் , அடுத்த ஆண்டு பழைய வரி நடைமுறைக்கு மாறிக்கொள்ளலாம் அதற்கு அடுத்த ஆண்டு தேவைப்பட்டால் மீண்டும் புதிய வரிநடைமுறைக்கு மாற்றிக் கொள்ளலாம். அவர்களுக்கு இதில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதுவே ஒரு தொழில் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் நபர்கள் அத்தனை எளிதாக மாற முடியாது. பழைய வரி நடைமுறையில் இருந்து புதிய நடைமுறைக்கு மாறியவர்கள் மீண்டும் பழைய முறைக்கு மாற வேண்டும் என விரும்பினால் Form 10-IEAவை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். இந்த படிவம் ஏற்கப்பட்டால் மட்டுமே அவர்களால் மாற முடியும். பொதுவாக அவ்வாறு மாற முடியாது என்றே இத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
எனவே நீங்கள் வணிகம் செய்து வருமானம் பெறும் நபர் என்றால் புதிய வரி கணக்கு நடைமுறையை ஒரு முறை தேர்வு செய்துவிட்டால் பழைய முறைக்கு மாற முடியாது. இரண்டிலும் கிடைக்கும் பலன்களை விரிவாக ஆய்வு செய்துதான் முடிவெடுக்க வேண்டும்.
Story written: Devika


Click it and Unblock the Notifications