கடந்த 3 மாத காலமாக பொதுமக்கள் ஆகிய நாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் நுணுக்கமாக கவனித்து வருகிறோம். அதுதான் விலைவாசி உயர்வு. ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதில் ஒன்று இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு. கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. இதிலிருந்தே இன்னும் வாகன ஓட்டிகள் மீளவில்லை. இப்போது அதைவிட மிகப்பெரிய ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. இனி வரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹர்மோஸ் பாதை கிட்டத்தட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய், சிலிண்டர் போன்றவற்றை கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இந்தப் பாதை மூடப்பட்டால் ஈரான் மட்டுமல்ல.. அந்த வழியாகப் பொருட்களை தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் பல நாடுகள் பாதிக்கப்படும். இதன் காரணமாக இந்தியாவில் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4 முறை உயர்த்தப்பட்டது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சாமானிய மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக ஓரளவுக்கு மேல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. ஏற்கனவே கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்று 100 டாலரை தாண்டிவிட்டது.
அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் ஓரளவுக்கு மேல் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்காத காரணத்தினால் ஒவ்வொரு நாளும் ரூ.550 கோடி வரை நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படியே தொடர்ந்தால் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழி இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. பிரபல நிதி நிறுவனமான ஐசிஆர்ஏ-வின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் பிரசாந்த், " அரசு எண்ணெய் நிறுவனங்கள் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 5.50 ரூபாயும், 1 லிட்டர் டீசலுக்கு 4.50 ரூபாயும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார்.
அதுவும் பெட்ரோல் டீசலை வாங்கிய விலைக்கே நிறுவனங்கள் விற்று வருகின்றன. இன்னும் வரவிருக்கும் நாட்களில் 12 ரூபாய் வரை பெட்ரோல் விலையை அதிகரித்தால் மட்டுமே இந்நிறுவனங்கள் தங்களுடைய நஷ்டத்தை ஈடுசெய்யும்" என்றும் கூறியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க சிலிண்டர் பிரச்சனையும் ஓய்ந்தபாடில்லை. அரசுக்கு எல்பிஜி சிலிண்டர் சப்ளையிலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி ஒவ்வொரு சிலிண்டர் விநியோகத்திலும் அரசு சுமார் 650 ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்து வருவதாக பெட்ரோலியம் மினிஸ்ட்ரியின் ஜாயின்ட் செகரட்டரி சுஜாதா சர்மா கூறியுள்ளார்.
அதோடு ஏடிஎம் எரிபொருள் விற்பனையும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக சர்மா கூறியுள்ளார். ஹர்மோஸ் ஜலசந்தியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்ந்தால், இனி வரும் நாட்களில் கச்சா எண்ணையின் விலை அதிரடியாக உயரும். அப்படி இருக்கும் பட்சத்தில் சில்லறை விலையை உயர்த்துவதை தவிர அரசு நிறுவனங்களுக்கு வேறு வழியே இருக்காது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் அரசு இதுபோன்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி சாமானியர்களின் தலையில் இருக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications