இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் வேளையில் நாட்டின் பணப்புழக்கத்தைக் குறைத்து அதன் மூலம் பணவீக்கம் மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தையையும் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்தலாம் எனச் சில வாரங்களுக்கு முன்பு கணிக்கப்பட்டது.
இதற்கு ஏற்றார் போல் அமெரிக்கப் பெடரல் வங்கியும் பணப்புழக்கத்தைக் குறைக்க வட்டியை உயர்த்த திட்டமிட்டு வந்தது. ஆனால் தற்போது மொத்த நிலைமையும் மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முதல் முக்கியக் காரணம் புதிய கொரோனா வகையான ஒமிக்ரான்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இந்த நாணய கொள்கை கூட்டத்திலும் எவ்விதமான வட்டி மாற்றத்தையும் அறிவிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் ரிசர்வ் வங்கியை தனது நாணய கொள்கை தரவுகளை திரும்பப் பெற முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது.
நாணய கொள்கை
ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை இந்தக் கூட்டத்திலும் உயர்த்தவில்லை எனில் 9 நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து ஓரே வட்டி விகிதம் நடைமுறையில் இருக்கும். ஆனால் வர்த்தக வங்கிகள் தங்களது வருமானத்தை அதிகரிக்க வட்டியை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வர ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைப் பெரிய அளவில் குறைத்ததைத் தொடர்ந்து நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையப் பெரிய அளவில் உதவியது. தற்போது வட்டியை உயர்த்த திட்டமிடும் போது ஒமிக்ரான் வைரஸ் பெரும் பிரச்சனையாக உள்ளது.
சீனா அறிவிப்பு
இதேவேளையில் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் வேகமாக வளர்ந்து வரும் சீனா நேற்று ஒமிக்ரான் உட்படப் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஆசியச் சந்தையின் வர்த்தகமும் இன்று சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியால் வட்டியை உயர்த்துவதற்கான வாய்ப்புகளும் குறைவு, மேலும் அமெரிக்காவும் வட்டியை உயர்த்தப் போகிறோம் எனத் தொடர்ந்து கூறி வந்தாலும் அந்நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக வளர்ச்சி சாதகமாக உள்ளது. நேற்று அந்தோனி ஃபாசி ஒமிக்ரான் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications