இன்று நாம் உலகம் முழுவதும் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் ஜிமெயில் சேவை தொடங்கப்பட்டது ஏப்ரல் 1ஆம் தேதி தான்.
கூகுள் இணை நிறுவனங்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தான் முதன் முறையாக ஜிமெயில் சேவையை அறிமுகம் செய்தனர். லாரி பேஜூம், செர்ஜி பிரினும் பீட்டா வெர்ஷனில் முதல்முறையாக ஜிமெயில் சேவையை அறிமுகம் செய்யப் போகிறோம் என கூறினார்களாம். அவர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது கூகுள் ஊழியர்கள், ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினம் நீங்கள் எங்களை முட்டாளாக்க பார்க்கிறீர்களா என கேட்டார்களாம்.

கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் குறும்புத்தனம் நிறைந்தவர்களாம். ஏப்ரல் 1ஆம் தேதி வந்தாலே வித்தியாசமான தகவலை நிறுவனத்தில் பரவ விட்டு அனைவரையும் ஏமாற்றி முட்டாள்கள் ஆக்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்களாம். நிலவில் இருக்கும் கூகுள் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு, தேடு பொறியில் நூதன வசதி அறிமுகம் என ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி வினோதமான அறிவிப்புகளை வெளியிட்டு வந்துள்ளனர்.
எனவே அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஜிமெயில் சேவை அறிமுகம் என ஊழியர்களிடம் கூறிய போது வழக்கம் போல இருவரும் விளையாடுகிறார்கள் என அனைவரும் எண்ணினார்களாம். ஆனால் இந்த முறை லாரி பேஜூம், செர்ஜி பிரினும் தங்களின் முட்டாள்கள் தின பாரம்பரியத்தை உடைத்து ஜிமெயில் சேவையை தீவிரமாக அறிமுகம் செய்தனர்.
அந்த காலகட்டத்தில் ஜிமெயில் மட்டுமே ஒரு மின்னஞ்சல் கணக்கிறகு ஒரு gigabyte சேமிப்பகத்தை கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தது. 21 ஆண்டுகளுக்கு முன்பு 1 gigabyte சேமிப்பகம் என்பது மிகவும் பெரிய விஷயம். ஏனெனில் யாகூ, மைக்ரோசாப்ட் ஆகியவை மின்னஞ்சல் சேவையை வழங்கினாலும் ஒரு கணக்கில் 30 முதல் 60 மின்னஞ்சல்கள் வரை மட்டுமே சேமிக்க முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் ஜிமெயிலில் ஒரே நேரத்தில் 13,500 மின்னஞ்சல்களை சேமிக்க முடிந்தது.
குறிப்பாக ஜிமெயிலில் தேடுதல் வசதி கொண்டுவரப்பட்டதே இதன் வெற்றிக்கு காரணம் என கூறலாம். எளிமையாக நாம் மேலே இருக்கும் தேடுதல் பொத்தானில் குறிப்பிட்ட கீ வேர்டுகளை உள்ளீடு செய்தால் போதும் அது தொடர்பாக இதுவரை வந்திருக்கும் மெயில்களை நாம் எளிதாக பார்த்து விடலாம்.
தற்போது உலகளவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் இருக்கிறது. உலகம் முழுவதும் 1.8 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், ஜிமெயில் இன்றியமையாத தகவல் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. ஜிமெயிலில் கூகுள் டிரைவ், மீட் மற்றும் காலண்டர் போன்ற வசதிகளும் கிடைப்பதால் அதனை கொண்டு மற்ற சேவைகளை பெறுவதும் எளிதாகியுள்ளது.


Click it and Unblock the Notifications