ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ் யாதவ். இவரது தந்தை கொத்தனாராக பணியாற்றி வந்த நிலையில், அவரின் வருமானம் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. ஆனாலும், தனது சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு மிகப் பெரிய கனவுடன் சூரஜ் யாதவ் இருந்தார்.
இதனால், அவர் அரசுப் பணிக்குத் தயாராவதற்காக ராஞ்சிக்கு சென்றார். ஆனால், அங்கு நிதி நெருக்கடி அவரை கடுமையாக வாட்டி வதைத்தது. அப்போது, நண்பர்களின் உதவியுடன் ஒரு பழைய பைக்கை வாங்கி, உணவு டெலிவரி செய்யும் ஊழியராகவும், பைக் டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்ற தொடங்கினார்.

சில நாட்கள் என் உடல் ஓய்வை கேட்கும்.. ஆனால், என் கனவுகள் என்னை முன்னோக்கி தள்ளியதாக அவர் கூறுகிறார். சூரஜ் யாதவுக்கு திருமணமான நிலையில், அவரது மனைவி வீட்டுப் பொறுப்புகளை கவனித்துக்கொண்டு அவருக்கும் உறுதுணையாக இருந்து வந்தார். அதேபோல், அவரது சகோதரி குடும்ப பொறுப்புகளை எடுத்துக்கொண்டார். நண்பர்கள் அவருக்கு உணர்வுபூர்வமான ஆதரவை அளித்து வந்தனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பிற்கு பிறகு, சூரஜ் யாதவ் ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) தேர்வில் 110-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். நேர்காணலின்போது, அவரது டெலிவரி வேலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அந்த வேலை எனக்கு நேர மேலாண்மை மற்றும் திட்டமிடல் போன்ற நிர்வாக திறன்களை கற்று கொடுத்ததாக பதிலளித்துள்ளார். அவரது இந்த பதில் நேர்காணல் குழுவினரை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த வெற்றிச் செய்தியை தனது மனைவியிடம் தொலைபேசியில் பகிர்ந்தபோது, இருவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். "திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இறுதியாக எங்கள் கனவுகள் நனவாகுவதை கண்டோம்" என்று சூரஜ் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும் இன்று, அவர் தனது கனவை அடைந்து, தனது கிராமத்திற்கும், குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து சூரஜ் யாதவ் கூறுகையில், "முன்பு நான் சுவிக்கி ஊழியர் என்று அறியப்பட்டேன். இப்போது துணை மாவட்ட ஆட்சியர் என்று அழைக்கப்படுவேன். இந்த இரண்டு பணிகளும் எனக்கு வெவ்வேறு பாடங்களை கற்றுக்கொடுத்தன. ஒன்று, உயிர் வாழவும், மற்றொன்று மக்களுக்கு சேவை செய்யவும் கற்றுக்கொடுத்தது" என்று கூறியுள்ளார்.
ஒருவர் தனது லட்சியத்தை அடைவதற்கு எந்த ஒரு வேலையும் சிறியதல்ல என்பதையும், வெற்றி என்பது ஒருவர் தொடங்கும் இடத்தை பொறுத்தது அல்ல, மாறாக அவர் தனது இலக்குகளை தொடரும் உறுதியை பொறுத்தது என்பதையும் சூரஜ் யாதவின் கதை நமக்கு உணர்த்துகிறது. இவரது கடின உழைப்பின் வெற்றிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications